ஆர்.என்.ரவியை சந்தித்து அழைப்பு விடுத்த அப்பாவு!

 
1

தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2025ம் ஆண்டிற்கான முதல் கூட்டம் வரும் 6ஆம் தேதி தொடங்குகிறது. மரபுப்படி ஆண்டின் முதல் கூட்டத்தில் ஆளுநர் உரை இடம் பெறுவது வழக்கமாகும். ஆளுநரின் உரையில் தமிழ்நாடு அரசின் திட்டங்கள், கொள்கைகள் அரசின் சாதனைகள், அந்த ஆண்டில் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்ககள் ஆகியவை இடம் பெறும். ஆளுநரின் உரை சட்டப்பேரவையால் தயார் செய்யப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும். அதனை தமிழ்நாடு ஆளுநர் சட்டப்பேரவையில் படித்து, பேரவையின் முதல் கூட்டத்தை தொடங்கி வைப்பார்.

இந்த நிலையில் 2025ஆம் ஆண்டிற்கான சட்டப்பேரவையின் முதல் கூட்டம் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், சட்டப்பேரவையில் உரை நிகழ்த்த வருமாறு முறைப்படி அழைப்பு விருப்பதற்காக இன்று காலை சபாநாயகர் அப்பாவு, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினார். அப்போது ஆளுநருக்கு பூங்கொத்து கொடுத்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த சபாநாயகர் அப்பாவு, சட்டப்பேரவையில் உரை நிகழ்த்த வருமாறு அழைப்பு விடுத்தார். அவரும் வர சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின்போது, சட்டப்பேரவை முதன்மை செயலாளர் சீனிவாசன், ஆளுநரின் செயலாளர் கிர்லோஷ் குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

ஆளுநர் உரை குறித்து சபாநாயகர் அப்பாவு ஏற்கனவே செய்தியாளர் சந்திப்பின் போது, "தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் ஜனவரி 6ம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் காலை 9.30 மணிக்கு ஆளுநர் உரையுடன் பேரவைக் கூட்டம் தொடங்கும். கடந்த ஆண்டு ஆளுநர் உரையின் முதல் பக்கத்தையும், கடைசி பக்கத்தையும் வாசித்தார். இந்த முறை முழுமையாக வாசிப்பார் என நம்புகிறோம்,"என தெரிவித்தார்.