"என் பொண்ணு செத்துட்டா!" – மாற்று சாதி திருமணம் செய்த மகளுக்கு உயிருடன் இறுதிச்சடங்கு செய்த தந்தை!
உத்தர பிரதேச மாநிலம் சந்தோலி மாவட்டத்தைச் சேர்ந்த நேஹா (20), பெற்றோரின் எதிர்ப்பை மீறி மாற்றுச் சாதியைச் சேர்ந்த சாவன் என்பவரைப் பதிவுத் திருமணம் செய்துகொண்டார். குடும்பத்தினர் அழைத்தும் அவர் கணவருடன் வாழ்வதில் உறுதியாக இருந்தார். இதனால் ஆத்திரமும் மன உளைச்சலும் அடைந்த அவரது தந்தை பிரகாஷ் சிங், தன் பேச்சை மீறிச் சென்ற மகள் உயிரிழந்துவிட்டதாகக் கருதி அவருக்கு முறைப்படி இறுதிச்சடங்கு செய்த அதிர்ச்சி சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் சந்தோலி மாவட்டத்தில் உள்ள ஜக்தீஷ்ராய் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி பிரகாஷ் சிங். இவரது மகள் நேஹா சிங்(வயது 20), அதே பகுதியை சேர்ந்த கால்நடை வளர்ப்புத்துறையில் ஊழியரான சாவன்(24) என்பவரை காதலித்து வந்தார்.இதில் சாவன் வேறு சாதியை சேர்ந்தவர் என்பதால், இவர்களின் காதலுக்கு நேஹாவின் தந்தை எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இருப்பினும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி சாவன்-நேஹா ஜோடி வீட்டை விட்டு வெளியேறி பதிவுத் திருமணம் செய்து கொண்டனர்.
தொடர்ந்து சோன்பத்ரா நகரில் இருவரும் வாடகைக்கு வீடு எடுத்து கணவன், மனைவியாக வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இதனிடையே, தங்கள் மகளை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வர நேஹாவின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் பலமுறை முயற்சி செய்துள்ளனர். ஆனால் தனது முடிவில் உறுதியாக இருந்த நேஹா, தன்னுடைய கணவர் சாவனை பிரிந்து தன்னால் வர முடியாது என்று தெரிவித்துள்ளார்.
இதனால் நேஹாவின் தந்தை பிரகாஷ் சிங் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானார். இந்நிலையில் தனது மகள் உயிரிழந்துவிட்டதாக கருதி, நேஹாவுக்கு அவரது தந்தை பிரகாஷ் இறுதிச்சடங்கு செய்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “குழந்தைகளை வளர்ப்பதற்காக பெற்றோர் ஏராளமான தியாகங்களை செய்கின்றனர். அவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கின்றனர்.
பிள்ளைகள் தங்கள் வாழ்வின் முக்கிய முடிவுகளை எடுக்கும்போது பெற்றோரை மதித்து அவர்களின் சம்மதத்தைப் பெற வேண்டும். எங்கள் விருப்பம் இல்லாமல் நேஹா திருமணம் செய்து கொண்டது என்னை மிகவும் காயப்படுத்தியது. அதனால் அவளது இறுதிச்சடங்கை நான் செய்துவிட்டேன்” என்று தெரிவித்தார்.
மேலும், பிரகாஷ் சிங்கின் தம்பி இது குறித்து கூறுகையில், “எனது அண்ணனின் முடிவை நான் ஆதரிக்கிறேன். நேஹாவை அவர் படிக்க வைத்தார். ஆண் பிள்ளை போல் அவளை வளர்த்தார். நேஹா எங்கள் சாதியை சேர்ந்த நபரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். ஆனால் வேறு சாதி நபரை நேஹா திருமணம் செய்து கொண்டது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று கூறினார்.

