ஆட்சிக்கு வந்த இரண்டே ஆண்டுகளில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிவரும் திமுக அரசு- முத்தரசன்

 
mutharasan

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்று, பாராட்டுகிறது! அதிமுக & பாஜகவின் நிலை என்ன? என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கேள்வி எழுப்பியுள்ளார். 

அண்ணாமலை பகல் கனவு காண்கிறார்  - முத்தரசன் விமர்சனம்.. 

இதுதொடர்பாக முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த சட்டமன்ற தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை பலவற்றை நிறைவேற்றியுள்ள தமிழ்நாடு அரசு, தற்போது முத்திரை பதிக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை நிறைவேற்றியுள்ளதை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயற்குழு பாராட்டி வரவேற்கின்றது.
இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தை சேர்ந்த, ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்கள் உட்பட தகுதி வாய்ந்த ஒரு கோடியே ஆறு லட்சத்து ஐம்பதாயிரம் தாய்மார்களும், சகோதரிகளும் பயன் அடைகின்றனர்.

மாதம் ரூபாய் ஆயிரம் வீதம் ஆண்டிற்கு பணிரண்டாயிரம் ரூபாய் ஒவ்வொருவரும் பயன் பெறுகின்றனர். இத்திட்டத்தின் பயனாளிகள் பணம் பெறுவதற்கு அலைந்திட வேண்டிய அவசியமில்லை. அவரவர் வங்கிக் கணக்கில் பணம் அனுப்புவதுடன் அவரவர் தேவைக்குரிய காலத்தில் ஏடிஎம் கார்டு மூலம் பெற்றுக் கொள்வதற்கான வசதிகளும் முழுமையாக செயல்படுத்தப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடிகள், ஒன்றிய அரசின் ஒத்துழைப்பு இல்லாமை போன்ற கடும் நெருக்கடிகளுக்கு மத்தியிலும், தான் கொடுத்திட்ட வாக்குறுதியை நிறைவேற்றிட வேண்டும் என்கிற மன உறுதியுடன் நிறைவேற்றிய மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை பாராட்டி வாழ்த்துகின்றோம்.

முத்தரசன்

தமிழக அரசு மேற்கொண்ட இத்தகைய புரட்சிகரமான திட்டத்தை மற்ற மாநிலங்களும் பின்பற்ற தொடங்கியிருப்பதன் மூலம் இத்திட்டம் எத்தகைய வரவேற்பை பெற்றுள்ளது என்பதை உணர முடியும். தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக இத்திட்டத்தை வரவேற்கிறதா? அல்லது எதிர்க்கின்றதா என்பது குறித்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அதே போன்று ஒன்றியத்தில் ஆளும் கட்சியாக உள்ள பாஜக இத்திட்டம் குறித்து தனது நிலை என்னவென்பதனையும் பகிரங்கமாக தெரிவித்திடல் வேண்டும்.

நாள்தோறும் அறிக்கைகளும், பேட்டிகளும் அளித்து வரும் பாஜகவின் மாநில நியமன தலைவர் அண்ணாமலை இத்திட்டம் குறித்து தனது நிலைபாட்டை வெளிப்படுத்திட வேண்டுகிறோம். ஒன்றிய அரசு குறிப்பாக பிரதமர் மோடி 2014-ம் ஆண்டு கொடுத்திட்ட ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை, கறுப்பு பணத்தை மீட்டு இந்திய குடிமகன் ஒவ்வொருவருக்கும் ரூ.15 லட்சம் வங்கியில் வரவு வைத்தல், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தல், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கல் என எந்த ஒரு வாக்குறுதியையும் கடந்த 10 ஆண்டுகாலமாக நிறைவேற்றவில்லை. மாறாக சனாதனம் குறித்து சங்கு ஊதி தற்காத்து கொள்ள மோடி முயலும் சூழலில் ஆட்சிக்கு வந்த இரண்டே ஆண்டுகளில் கொடுத்த வாக்குறுதிகள் ஒவ்வொன்றையும் நிறைவேற்றிக் கொண்டுள்ள திமுக அரசை பாராட்டுகின்றோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.