எ.வ.வேலு இல்லத்திலும், அலுவலகத்திலும் அத்துமீறி சோதனை- முத்தரசன்

இந்திய ஒன்றியத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி பொறுப்பு ஏற்றதிலிருந்து, எதிர்கட்சிகளையும், எதிர் கருத்துக்களையும் ஒடுக்கும் முயற்சியில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய ஒன்றியத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி பொறுப்பு ஏற்றதிலிருந்து, எதிர்கட்சிகளையும், எதிர் கருத்துக்களையும் ஒடுக்கும் முயற்சியில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது. இதற்கு, சட்டப்பூர்வ நிறுவனங்களான அமுலாக்கத்துறை, வருமானவரி துறையை பயன்படுத்துகிறது. மேலும் துணை ராணுவ படைகளையும் பயன்படுத்துகிறது. இவையாவும் மாநிலங்களின் இறையாண்மை மீதான தாக்குதலாகும்.
சமீபத்தில் கூட டெல்லி துணை முதல்வர் மணிஷ் சியோடியா, நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங், டெல்லி தொழிலாளர்கள் துறை அமைச்சர் ராம்குமார், முதலமைச்சர் கெஜ்ரிவால் என பலர் மீதும் அமுலாக்கத்துறையின் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் மட்டும் 25 இடங்களுக்கு மேல் சோதனைகள் நடத்தப்படுகிறது. இவையாவும் எதிர் கட்சிகள், ஒன்றிய அரசுக்கு எதிராக மிக உறுதியாக மாற்றுக் கருத்துக்கள் கூறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் திமுகவின் ஆட்சி, அதன் மக்கள் நல்வாழ்வு திட்டங்களை பொறுத்துக் கொள்ள முடியாமல், ‘இந்தியா’ கூட்டணிக்கு வலு சேர்க்கும் திமுகவின் உறுதியான கொள்கை நிலைபாடுகளை சகித்துக் கொள்ள முடியாமல் திமுகவின் அமைச்சர்கள், அதன் ஆதரவாளர்களின் இல்லங்களில் வருமானவரி துறை, அமுலாக்கத்துறை சோதனைகளில் ஈடுபடுகிறது. தற்போதும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இல்லத்திலும், அலுவலகத்திலும் அத்துமீறி சோதனைகள் நடைபெறுகிறது.
எதிர்கட்சிகளை குறிவைக்கிற ஒன்றிய அரசின் இத்தகைய நடவடிக்கைகள் யாவும் சட்டத்திற்கும், நாடாளுமன்ற ஜனநாயக மரபுகளுக்கும் எதிரானது, வன்மையான கண்டனத்திற்குரியது. இந்தியாவில், வரி ஏய்ப்பு செய்து, சட்டத்திற்கு புறம்பாக குறுகிய காலத்திலேயே வருமானங்களை பல மடங்கு அதிகரித்துக் கொண்ட பாஜக ஆட்சியாளர்கள் அதன் தலைவர்களின் இல்லங்களில், அலுவலகங்களில் இதுபோல் சோதனைகள் நடத்தப்படுவதில்லை. ஒவ்வொரு நாளும் ‘இந்தியா’ கூட்டணி வெற்றி உறுதியாகி வரும் அரசியல் சூழலில் எப்படியாவது எதிர்கட்சிகளை அச்சுறுத்தி ஒற்றுமையை சிதைக்கும் முயற்சியில் ஒன்றிய அரசு ஈடுபடுவது இந்திய ஜனநாயக விழுமியங்களுக்கு எதிரானது என்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சுட்டிக்காட்டி எச்சரிக்க விரும்புகிறது. எத்தகைய ஜனநாயக விரோத செயல்களிலும் ஒன்றிய பாஜக அரசு ஈடுபட்டாலும், எந்தச் சூழலிலும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற இயலாது என்பதனை தேர்தல் காலம் பாடமாக உணர்த்தும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.