பாலியல் வன்கொடுமை- குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்: முத்தரசன்
பல்கலைக் கழக மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அண்ணா பல்கலைக் கழகத்தில் இரண்டாம் ஆண்டு பயின்று வரும் மாணவி பாலியல் வன்கொடுமை தாக்குதலுக்கு ஆளாகியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
பல்கலைக் கழக வளாகத்தில் பாதுகாப்பு பணியாளர்கள், கண்காணிப்பு கேமிராக்கள் போன்ற ஏற்பாடுகள் இருந்தும் பாலியல் வன்தாக்குதல், அதிலும் அவரோடு இருந்த சக மாணவரை தாக்கி கொடுங்காயங்கள் ஏற்படுத்தி விட்டு, மாணவியை இழுத்து சென்று, கூட்டு பாலியல் வன்தாக்குதலில் குற்றவாளிகள் ஈடுபட்டுள்ளனர் என்பது பல வினாக்களை எழுப்புகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றாலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு, அவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி விடாமல் தண்டிக்கப்படுவதை காவல் துறை உறுதி செய்ய வேண்டும் எனவும், பல்கலைக் கழக வளாகப் பாதுகாப்பு குறைபாடு குறித்து விசாரித்து, அதற்கு காரணமானவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.