ஆர்.என்.ரவியின் வம்பு வளர்க்கும் போக்குக்கு முத்தரசன் கண்டனம்

 
mutharasan

ஆளுநர் பொறுப்பில் இருந்து கொண்டு ஆர்.என்.ரவி இது போன்ற மலிவான செயலில் ஈடுபடுவதை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

mutharasan rn ravi

முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி வள்ளுவர் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள செய்தியில், வள்ளுவர் படத்திற்கு காவி உடை போட்டு, திருநீறு பூச்சு பூசி அச்சிட்டுள்ளதுடன் “பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவி” குறிப்பிட்டிருப்பது வம்புக்கு இழுக்கும் அடவாடித்தனமாகும்.

அய்யன் வள்ளுவர் படைப்பில் உள்ள 1330 குறட்பாக்களில் ஒன்றுகூட எந்த மதம் சார்ந்தும் பேசுவதில்லை. ஆனால், “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என பிறப்பில் சமத்துவம் நிலவுவதை உணர்த்துகிறது. மேலும், “ஒழுக்கமும், வாய்மையும் நானும் இம் மூன்றும் - இழுக்கார் குடி பிறந்தார்” மற்றும் “நகை ஈகை, இன்சொல் இகழாமை நான்கும் - வகையென்ப வாய்மைக் குடிக்கு“ ஆகிய குறள்கள் வழி “வெறுப்பு அரசியலை” ஒதுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, உலகப் பொதுமறை தந்த தமிழ் சமூகத்தின் தொன்மை சிறப்பு வாய்ந்த புலவரை, சனாதனத் துறவி என இழிவுபடுத்துவது, பகுத்தறிவாளர்களையும் மனித நேயம், நல்லிணக்கம் பேணி வருவோரையும் வம்புக்கு இழுத்து, கலகம் செய்யும் நோக்கம் கொண்டது. ஆளுநர் பொறுப்பில் இருந்து கொண்டு ஆர்.என்.ரவி இது போன்ற மலிவான செயலில் ஈடுபடுவதை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.