மோடியை விமர்சித்ததால் சு.வெங்கடேசனுக்கு கொலை மிரட்டல்- முத்தரசன் கண்டனம்
நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மர்மநபர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். “எப்படி நீ பிரதமர் மோடியை விமர்சிக்கலாம்? தமிழ்நாட்டில் உயிரோடு நடமாட முடியாது! நானே கொலை செய்வேன்!” என மிரட்டியுள்ளார்.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், “மதுரை மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், நேற்று (28.07.2025) கடந்த ஏப்ரல் மாதம் பகல்ஹாமில் நடந்த பயங்கரவாதிகளின் தாக்குதல் குறித்த விவாதத்தில் பங்கேற்று பேசினார். அவரது உரை நாட்டின் பிரதமர், பாதுகாப்புத்துறை மற்றும் உள்துறை அமைச்சர்களின் பொய் மூட்டைகளை அவிழ்த்து கொட்டி அம்பலப்படுத்தியது. சு.வெங்கடேசன் அவையில் பேச எழுந்த போதே, பாஜகவினர் கூச்சல் எழுப்பி குழப்பம் விளைவிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டின் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி உறுப்பினர்கள் அரணாக ஒன்றுபட்டு நின்றதால் அவர் உரையாற்ற முடிந்தது. அவர், அவையில் முன்வைத்த கூர்மையான விமர்சனங்களால் ஆளுங்கட்சியின் முகத்திரை, நார், நாராக கிழித்து, அதன் பொய் முகம் நாட்டுக்கு காட்டப்பட்டது. இந்த அரசியல் விமர்சனத்துக்கு பொறுப்பாக பதில் அளிக்க திராணியற்ற ஆளுங்கட்சியின் வன்முறை கும்பலை சேர்ந்தவர், நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். “எப்படி நீ பிரதமர் மோடியை விமர்சிக்கலாம்? தமிழ்நாட்டில் உயிரோடு நடமாட முடியாது! நானே கொலை செய்வேன்!” என மிரட்டியுள்ளார்.
இது போன்ற கோழைத்தனமான மிரட்டலுக்கு கம்யூனிஸ்டுகள் ஒரு போதும் அஞ்சுவதில்லை என்பதுதான் வரலாறு. அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள கருத்துரிமையை பறிக்கும் கொலை மிரட்டலை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி கடுமையாக கண்டிக்கிறது. இந்தக் கொலை மிரட்டல் தொடர்பாக தமிழ்நாடு காவல் துறையில் புகார் செய்யப்பட்டுள்ளது. இந்த புகாரின் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து, கொலைமிரட்டல் செய்தவரையும், அவரது பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை வேரின் அடி நுனி வரை விசாரித்து சதிகாரர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, அவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்து விடாமல் தண்டிக்கப்பட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசையும், காவல் துறையினையும் கேட்டுக் கொள்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.


