"விஜயை வீழ்த்த பாஜக முயற்சி"- முத்தரசன்
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே ஞாயிறு பகுதியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் முத்தரசன் கலந்து கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முத்தரசன், பொங்கல் பண்டிகை திருநாளை அனைவரும் ஒற்றுமையுடன் கொண்டாடிட வேண்டும் என்றார். ஆனால் மதரீதியாக மக்களை பிளவுபடுத்தும் முயற்சியை மேற்கொண்டு வருகிறார்கள் எனவும், தமிழ்நாடு மக்கள் அதற்கு ஒத்துழைக்காமல் எப்போதும் போல் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். அரசியல் ஆதாயத்திற்காக குறுகிய நோக்கத்துடன் மதரீதியில், சாதிய ரீதியில், கடவுள் ரீதியில் பிளவுபடுத்தும் சிலரது நோக்கம் என்பது கண்டனத்திற்கு உரியது என்றார். பண்டிகை நாளில் தேர்வை அறிவித்து பொங்கல் விழாவை ஒன்றிய அரசு அலட்சியப்படுத்துவது கவலைக்கு உரியது என தெரிவித்தார். தேர்தல் வர உள்ளதால் தமிழ் மொழி ஆகச் சிறந்த மொழி என பேசுவார்கள் எனவும், குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் பேசும் சமஸ்கிருதம், ஹிந்திக்கு அதிக நிதி ஒதுக்கும் ஒன்றிய அரசு, செம்மொழி அந்தஸ்துடைய தமிழுக்கு குறைந்த நிதி ஒதுக்கி தங்களது வெறுப்பை வெளிப்படுத்துகிறது என தெரிவித்தார்.
பாஜக விரித்திருக்கும் வஞ்சக சிலந்தி வலையில் அதிமுக சிக்கி தவித்து வருகிறது எனவும், அதிலிருந்து தப்ப வழி இல்லாமல் எதிர்காலத்தில் அதிமுக என்ற கட்சியே இல்லாத நிலையை பாஜக ஏற்படுத்துகிறது என சாடினார். விஜய் நடித்துள்ள திரைப்படம் வெளிவராமல் தடுக்க முடியாது எனவும், காலத்தை நீட்டிக்கிறார்கள் எனவும், முதலமைச்சர் உட்பட அனைத்து தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், சம்மந்தப்பட்ட விஜய் இதுவரையில் இது தொடர்பாக தமது கருத்தை தெரிவிக்காமல் வாய் மூடி மௌனமாக இருப்பதாக சாடினார். ஜனநாயகன் திரைப்பட விவாகரத்தில் தணிக்கை துறை, கரூர் சம்பவத்தில் சிபிஐ கொண்டு பாஜக ஆதாயம் தேடுவதாக சாடினார். சென்சார் மற்றும் சிபிஐ என இரண்டையும் பயன்படுத்தி விஜயை வஞ்சக வலையில் வீழ்த்த முடியுமா என பாஜக முயற்சிக்கிறது என குற்றம் சாட்டினார். நாட்டு மக்களையும் தனது கட்சியினரையும் நம்பாமல் எடப்பாடி பழனிச்சாமி அமலாக்கத்துறை சிபிஐ போன்ற அமைப்புகளை மட்டுமே நம்பியுள்ளார் என்றும், அனைத்து மாநிலங்களும், அரசியல் கட்சிகளும் தான் சொல்வதை மட்டுமே கேட்க வேண்டும் என்றும், மாநிலங்கள் கேட்க வேண்டும், தவறும் பட்சத்தில் பழி வாங்குவேன் என்கிற ஒரு சர்வாதிகார ஒரு பாசிச போக்கை மேற்கொள்வது கண்டனத்திற்கு உரியது எனவும் தெரிவித்தார்.


