"எறும்பு சிலந்தி வலையில் சிக்கி இருப்பது போல் அதிமுக பாஜகவிடம் சிக்கி உள்ளது"- முத்தரசன்
எறும்பு சிலந்தி வலையில் சிக்கி இருப்பது போல் அதிமுக பாஜகவிடம் சிக்கி உள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

அமித்ஷா தமிழ்நாடு சுற்றுப்பயணம் குறித்து கருத்து தெரிவித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன், “அமித்ஷா தமிழ்நாட்டிற்கு வந்தால் பிரளயம் ஏற்பட போவதாக பாஜகவினர் பிரச்சாரம் செய்தார்கள். ஆனால் எந்த பிரளயமும் ஏற்படவில்லை, ஏற்படப் போவதுமில்லை. அவர் நேற்று புதுக்கோட்டையில் பேசிய பேச்சு அநாகரிகத்தின் உச்சம் வன்மையாக கண்டிக்கத்தக்க பேச்சு. உள்துறை அமைச்சர் என்கிற பொறுப்பை இல்லாமல் பேசியுள்ளார். ஆனால் அவரிடமிருந்து வேறு எதையும் நாம் எதிர்பார்க்க முடியாது.
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி தான் அமையும் என அமித்ஷா கூறுகிறார் அதே நேரத்தில் தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம் என எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார் இதிலிருந்து அந்த கூட்டணியில் தன்மை தெரிந்துவிடும். பா.ஜ.க - அதிமுக எத்தை முறை கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் அவர்களால் வெற்றி பெற முடியாது அவர்கள் கூட்டணி தவளையும் எலியும் கூட்டணி வைத்தது போல் உள்ளது. எறும்பு சிலந்தி வலையில் சிக்கியது போல் பாஜகவிடம் அதிமுக சிக்கி உள்ளது அதிமுகவின் ரத்தத்தை பாஜக கொஞ்சம் கொஞ்சமாக உறிஞ்சி வருகிறது அதிமுகவை பாஜக மொத்தமாக அழிக்க பார்க்கிறது” என்றார்.


