"யோக்கியமான பிரதமர்னா அதானியை கைது பண்ணட்டும்.."- முத்தரசன்
பாஜக அரசிடமிருந்து அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாப்பது அவசியம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசியலமைப்பு தினத்தையொட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில் நடைபெற்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்வில் கட்சியின் மூத்த நிர்வாகிகளும் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளிடம் பேசிய முத்தரசன், “பாஜக ஆட்சியில் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு பாதுகாப்பு இல்லை. அதை பாதுகாக்க வேண்டும் என்று தான் இன்று உறுதிமொழி ஏற்கிறோம். இந்தியாவில் நாடாளுமன்ற ஜனநாயக முறையைத்தான் கடைபிடித்துள்ளோம். மற்றொரு முறை ஆயுத ஏந்திய முறை இருக்கிறது. அதை நாம் கடைபிடிக்கவில்லை. இந்த நிலையில் நாடாளுமன்ற ஜனநாயக முறையை சிதைக்கும் வகையில் தான் பாஜக அரசு செயல்படுகிறது. மகாராஷ்டிரா தேர்தலில் இஸ்லாமிய பெண்களை வாக்களிக்க அனுமதிக்கவில்லை. இது எந்த ஜனநாயக முறை? வாக்களிப்பது என்பது ஜனநாயக உரிமை அதையும் தற்போது பறிக்கப்படுகிறது. இது பேராபத்தை ஏற்படுத்து செயலாகும். எனவே தான் இதை பாதுகாக்க வேண்டும்.
அதானி விவகாரத்தில் பாஜக விளக்கெண்ணெய் விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. யோக்கியமான பிரதமராக இருந்தால் அதானியை கைது செய்யட்டும். அப்போது யார் யாருக்கு லஞ்சம் கொடுத்த பட்டியலை வாங்கி நடவடிக்கை எடுக்கட்டும். தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, டெல்லி என்பதல்ல பிரச்சனை. பாஜக குரலும் பாமக குரளும் ஒன்றாக இருக்கிறது. ஏன் ஒன்றாக இருக்கிறது என்றால் அதானியை காப்பாற்றுவதற்கு தான். தோழர் என்ற வார்த்தையை மிக சிறப்பானது. அதை எல்லோரும் பயன்படுத்துகிறார்கள். இதை தமிழக வெற்றி கழகத்தின் விஜய் பேசுவதால் ஆச்சரியம் ஒன்றுமில்லை. இளம்வயதில் இருந்து சிறப்பாக செயல்படும் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராகவும் பொறுப்பேற்று திறன்பட செயல்பட்டு கொண்டு இருக்கிறார்” எனக் கூறினார்.