இசைஞானி இளையராஜாவுக்கு பத்மபாணி விருது அறிவிப்பு..!
மஹாராஷ்டிராவில் வரும் 28ல் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில், அவருக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது. மத்திய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சகமும், மஹாராஷ்டிரா அரசும் இணைந்து, அஜந்தா - எல்லோரா சர்வதேச திரைப்படவிழாவை ஆண்டுதோறும் நடத்துகிறது.
இதில், கலைத் துறையில் வாழ்நாள் சாதனை படைத்தவர்களுக்கு பத்மபாணி விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான அஜந்தா - எல்லோரா சர்வதேச திரைப்பட விழா, வரும், 28ல் துவங்கி பிப்., 4 வரை மஹாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகரில் நடக்கவுள்ளது.
இந்த விழாவின் துவக்க நாளான ஜன., 28ல் ராஜ்யசபா எம்.பி.,யும், இசையமைப்பாளருமான இளையராஜாவுக்கு பத்மபாணி விருது வழங்கப்பட உள்ளதாக விழா குழுவினர் அறிவித்துள்ளனர். விருது பெறுவோருக்கு நினைவுப்பரிசு, பாராட்டு பத்திரம், 2 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்படும்.
முன்னதாக பிரபல பாடலாசிரியர் ஜாவித் அக்தர், இயக்குநர் - எழுத்தாளர் சாய் பிரனாஜ்பே, மற்றும் நடிகர் ஓம் புரி உள்ளிட்டோர் இந்த விருதை பெற்றுள்ளனர்.


