“அதிமுகவும் திமுகவும் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்க முயற்சி செய்தனர்”- முருகுமாறன் பரபரப்பு கடிதம்

 
முருகுமாறன்

அதிமுக காட்டுமன்னார்கோயில் முன்னாள் எம்எல்ஏ முருகுமாறன் அதிமுகவில் தன்னை விடுவித்து கொள்வதாக கட்சி தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து நிலை பொறுப்புகளில் இருந்தும் மிகுந்த மனவலியோடு என்னை முழுமையாக விடுவித்துக் கொள்கின்றேன். ஒரு நல்லதலைவர் தான் தலைமையேற்றுள்ள இயக்கத்தின் அனைத்து தொண்டர்களையும் தாயன்பு கொண்டு அரவணைக்க வேண்டும். தலைவருக்கு துன்பம் என்றால் தொண்டர்கள் கண்ணீர் சிந்த வேண்டும். தொண்டர்களுக்கு துன்பம், துயரம் என்றால் தலைவரின் கரங்கள் கண்ணீர் துடைக்க வேண்டும். அப்படிபட்ட உன்னத தலைவர்கள்தான் கழக நிறுவனர் பொன்மனத்தலைவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், இதய தெய்வம் பொன்மனத்தலைவி புரட்சித் தலைவி அம்மா ஆகியோர்கள்.

இவர்கள் கட்டிக் காத்த கழகம் இன்று தடம் மாறி இடம் மாறி செல்கின்றது. அன்று தேர்தல் களத்தில் வேட்பாளர்கள் தேர்வில், கழகத்திற்காக என்ன செய்தீர்கள்? எத்தனை முறை சிறை சென்றீர்கள்? உங்கள் வெற்றி வாய்ப்பு பற்றி சொல்லுங்கள்? என்று கேள்வி கேட்ட தலைவர்கள் பயணித்த கழகம் இன்று எத்தனை கோடிகள் உள்ளது? இத்தனை கோடிகள் வேண்டும் என்று கேட்கும் நிலைமைக்கு சென்று விட்டது. கொள்கை வழி நடந்த தலைவர்கள் கட்டிக்காத்த கழகம் இன்று கொள்கையை இழந்து கோடிகளில் தவழ்கின்றது. கோடிகள் இருந்தாலே யார்வேண்டுமானாலும் வேட்பாளர்கள் ஆகலாம் கழகத்தின் மாவட்ட கழக செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகளாக ஆகலாம் என்ற நிலையில் இன்று கழகம் உள்ளது. உண்மையாக உழைத்தவர்கள் துரோகத்தால் வீழ்த்தப்படுகிறார்கள். எளியவர்களை, வரியவர்களை அரசியல் களத்தில் நிறுத்தி இந்தியாவில் மூன்றாவது பேரியக்கமாக உருவாக்கி இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் நம்மிடையே ஒப்படைத்தார். இன்று கோடிகளை கொண்டவர்களே வேட்பாளர்கள் என தேர்வு செய்ததால் தமிழகத்தில் மூன்றாவது கட்சியாக கடை கோடியில் நமது கழகம் உள்ளது. உழைத்தவர்களை விட்டுவிட்டு கிடைத்தவர்களை வைத்துக் கொண்டு அரசியல் செய்தால் களத்தில் வெற்றி பெறமுடியாது, இனி நமது கழகத்தில் கோடிகள் இல்லாத கொள்கை உரம் கொண்ட ஏழை எளியவர்கள்,வறியவர்கள், உண்மையாக உழைப்பவர்கள் அரசியல் அதிகாரம் பெற முடியாது.

இன்றைய அரசியல் சூழலில் கொள்கை நிலை தடுமாறி திமுகவோடு உறவு கொண்டு ஆட்சி அமைக்க நமது தலைமை சென்றதால், வேண்டாத பல்வேறு அரசியல் நிகழ்வுகள் நடந்தது இராணுவ கட்டுப்பாடான நமது இயக்கம் தலைமையின் தவறான வழிகாட்டுதலால் இரண்டாக பிரிந்து சட்டமன்றத்தில் வாக்களித்த துர்பாக்கிய நிலை. எனவே இதயதெய்வங்கள் புரட்சித்தலைவர் எம்.ஜிஆர், புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் பொற்கால ஆட்சியை இனி நம்மால் எப்படி அமைக்க முடியும்? “துரோகம்” வெற்றி பெறாது “பச்சைத் துரோகம்” ஒருபோதும் வெற்றி பெறாது. கடந்த ஐந்தாண்டுகள், மாவட்ட பொருப்பாளராக தேர்தல் ஆணையராக பொதுக்கூட்டங்களில் பேச்சாளராக,ஊடக பங்களிப்பாளராக அழைத்து கழக பணிகளை செய்யச் சொல்லி மக்களை காப்போம்... தமிழகத்தை மீட்போம் 2026 நிகழ்வில் காட்டுமன்னார்கோயில் தொகுதியில் என்னை முன்நிலைபடுத்தி, நம்பிக்கை ஊட்டி இரவு பகலாக வேலைகளை வாங்கிக் கொண்டு 2026 சட்டமன்ற தேர்தல் களத்தில் 100% வெற்றி பெறக்கூடிய எனது சொந்த தொகுதியான காட்டுமன்னார்கோயில் தொகுதியை எனக்கு ஒதுக்காமல் தலைமை செய்த துரோகத்தை என் நெஞ்சம் மறக்க மறுக்கிறது. மாற்று இயக்கத்திலிருந்து அழைப்புகள் வந்தும் அவைகளை மறுத்தும் கழகத்தில் உறுதியாக இருந்தேன். 

மாண்புமிகு அண்ணன் ஆ.அருண்மொழிதேவன் அவர்கள் என்னை அழைத்து திட்டக்குடி தொகுதியின் வேட்பாளராக ஆக்கினார். தலைமை என் உழைப்பை ஊதாசினப்படுத்தியது. மாற்றான் தாய் மனப்பான்மையோடு வேட்பாளர்களை நடத்தியது, வேண்டியவர்கள் வேண்டாதவர்கள் என்ற நிலையில் நிதி பங்களிப்பு செய்தது. பின் எதை நம்பி உங்களோடு பயணிப்பது ? இதயதெய்வங்கள் புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி அம்மாஆகியோர்களை நம்பி கெட்டவர்கள் யாரும் இல்லை நம்பாமல் கெட்டவர்கள் பலர் உண்டு.ஆனால் இன்றைய தலைமையை நம்பி கெட்டவர்கள் பலர் அவற்றில் நானும் ஒருவன். மாண்புமிகு அம்மா அவர்கள் மறைவிற்கு பின் மாற்று இயக்கத்தில் இருந்து கோடிகள் என்னை பலமுறை முத்தமிட்ட போது அவற்றை புறந்தள்ளி கொள்கை வழி நின்று கழகத்தின் மாண்பை காத்த உண்மைத் தொண்டன் நான். "மதியாதார் வாசல் மிதியாதே” என்ற முதுமொழியை நெஞ்சில் நிறுத்துகின்றேன். மாணவப் பருவம் முதல் நகமும் சதையுமாக உடலும் உயிருமாக பயணித்து பணியாற்றிய இப்பேரியக்கத்தில் இருந்து விலக்கி கொள்ள வேண்டிய சூழ்நிலையை தலைமை எனக்கு ஏற்படுத்திய நிலையை எண்ணி மனம் வலிக்கின்றது. "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னை வளர்த்த கட்சி” “நான் வளர்த்த கட்சி” என்ற நினைவுகள் என்றும் என் மனதில் நிலைத்து நிற்கும். “ஒரு பேரியக்கத்தின் தலைவர் எப்பொழுதும் தவறான முடிவின் பின்னே செல்கின்றார்”” எனக் குறிப்பிட்டுள்ளார்.