சென்னையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கொலை குற்றங்கள் குறைவு - சென்னை காவல்துறை..!
டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம் எதிரொலியாக சென்னை மாநகர் முழுவதும் முக்கிய இடங்களில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, சோதனை செய்து வருகின்றனர். இதுதொடர்பாக சென்னை காவல்துறை அதிகாரிகள், டெல்லியில் கார் வெடி விபத்து நிகழ்ந்த சம்பவத்தை அறிந்து, இங்குள்ள மெட்ரோ ரயில் நிலையங்களிலும், தீவிர சோதனை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தனர்.
சென்னையில் மொத்தம், 4,979 ரவுடிகள் உள்ளனர். அவற்றில் ‘ஏ’ ப்ளஸ், ஏ, பி என வகைப்படுத்தி, கண்காணித்து வருவதாகவும் ரவுடிகள் யாரேனும் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டால் ஏற்கனவே நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் சேர்த்து தான் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில், கடந்த ஆண்டு, 102 கொலைகள் நடந்துள்ளன. இந்தாண்டு, 82 கொலைகள் நடந்துள்ளன. கடந்த ஆண்டு 35 செயின் பறிப்பு சம்பவங்கள் நிகழ்ந்த நிலையில், இந்தாண்டு 21 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. செயின் பறிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்துள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
இதேபோன்று, செல்ஃபோன் பறிப்பு சம்பவங்கள் கடந்தாண்டு 275 நிகழ்ந்த நிலையில் இந்தாண்டு 144 சம்பவங்கள் நடந்துள்ளன.
தலைக்கவசம் அணியாமல் காவல்துறை அதிகாரிகள் வாகனத்தை இயக்கிச் சென்று யாரேனும் விபத்தில் சிக்கினால், அவரது மேல் அதிகாரியின் மீது நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன் பெண் காவலர் ஒருவர் இருசக்கர வாகனத்தை தலைக்கவசம் அணியாமல் ஓட்டிச் சென்று, விபத்தில் சிக்கிக் கொண்டார். இந்த சம்பவத்திற்காக அவரது மேல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும் பிங் நிற ரோந்து வாகன திட்டம் சென்னையில் வெற்றிகரமானதை தொடர்ந்து, தற்போது தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், சென்னையில், மொத்தம் 59 பிங்க் நிற ரோந்து வாகனங்கள் இயக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்டோவில் கியூ.ஆர்.கோடு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது பயணியரிடையே வரவேற்பை பெற்றுள்ளதாகவும் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்னையை விட, ஆவடி கமிஷனர் அலுவலகத்தில் தான் அதிக அளவில் குட்கா பறிமுதல் செய்யப்படுகிறது. காரணம் அங்கு தான் குடோன்களில் பதுக்கி வைத்து வருகின்றனர். இங்கு அதுபோன்ற குடோன்கள் இல்லாததால் யாரும் குட்கா பொருட்களை தயாரிப்பதில்லை. பக்கத்து மாநிலமான ஆந்திராவில் தான் இவை தயாரிக்கப்படுகின்றன. அங்கு அவற்றை தயாரிக்கவோ விற்பனை செய்யவோ தடையில்லை.
இதனால் ஆந்திரா மாநிலத்திற்கு சென்று யாரையும் கைது செய்ய முடியாது என்று சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமே குட்கா புகையிலைப் பொருட்களுக்கு தடை உள்ளது.
சென்னையில் டிஜிட்டல் கைது என்பது மிகவும் குறைந்துள்ளது. இதற்கு காரணம் மக்களிடையே ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வு தான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

