முரசொலியில் கடைசியாக உதயநிதிக்காக குரல் கொடுத்த செல்வம்!

முரசொலி செல்வம் கடைசியாக முரசொலிக்காக எழுதி அனுப்பிய பெட்டிச்செய்தி வைரலாகிவருகிறது.
திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியின் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் முரசொலி செல்வம்(84). இவர் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் சகோதரி மகனும், முரசொலி மாறனின் தம்பியும் ஆவார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரி மு.க.செல்வியின் கணவரும் ஆவார். முரசொலி நாளிதழுடன் 50 ஆண்டுகள் தொடர்பு கொண்டிருந்த முரசொலி செல்வம் பெங்களூருவில் நேற்று காலமானார். முரசொலிக்கு கட்டுரை எழுதுவதற்காக குறிப்பு எடுத்து வைத்துவிட்டு கண்ணயர்ந்த நேரத்தில் மாரடைப்பால் உயிர் பிரிந்தது.
இந்நிலையில் முரசொலி செல்வம் கடைசியாக நேற்று முன்தினம் (9.10.2024) நள்ளிரவில் முரசொலிக்காக தன் கைப்பட எழுதி அனுப்பிய 'ஒரு கேள்வி ஒரு பதில்' பெட்டிச் செய்தி இணையத்தில் வைரலாகிவருகிறது.
கேள்வி : அரசு நிகழ்ச்சிகளுக்கு தி.மு.க. சின்னம் பொறித்த 'டி.சர்ட்' அணிந்து துணை முதலமைச்சர் கலந்து கொண்டு மரபு மீறி செயல்படுவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளாரே?
பதில் : கருப்பு, வெள்ளை, சிகப்பு பார்டர் பொறித்த கட்சிச் சின்ன கரை வேட்டிகளை அணிந்து அவருடைய கட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். முதல் எடப்பாடி பழனிசாமி வரை முதலமைச்சர்களாக பல அரசு விழாக்களில் கலந்துகொண்டதும் மரபு மீறலா? உ.பி.யில் காவி உடையிலேயே ஒரு முதல்வர் உலா வருகிறாரே; அது எத்தகையச் செயல்? விளக்குவாரா ஜெயக்குமார்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.