ஜல்லிக்கட்டு போட்டிக்கு முகூர்த்தக்கால் : பார்வையாளர்கள் இல்லாமல் நடத்த தயார் என அறிவிப்பு!!

 
tn

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தக்கால் நடப்பட்டது.

ttn

உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி வரும் 16-ஆம் தேதி நடைபெற உள்ளது.  இதில் 600க்கும் மேற்பட்ட காளைகளும், காளையரும் பங்கேற்கவுள்ளனர். மதுரை மாவட்டத்தில்  அவனியாபுரம் ,பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருவது வழக்கம்.  தமிழகத்தின் அடையாளமாகவே திகழும் ஜல்லிக்கட்டு போட்டி நூறு ஆண்டுகளுக்கும் மேலாக அலங்காநல்லூர் பகுதியில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழக இளைஞர்கள் பங்கேற்று தங்களின் வீரத்தை பறைசாற்றி  வருகிறார்கள். அந்த வகையில் அவனியாபுரத்தில் ஜனவரி 14ஆம் தேதியும், பாலமேட்டில் ஜனவரி 15ஆம் தேதியும், அலங்காநல்லூரில் ஜனவரி 16ஆம் தேதியும் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இதற்காக  வாடிவாசல் தயார் நிலையில் உள்ளது. 110 கிராமங்களில் 350க்கும் மேற்பட்ட காளைகள் இந்த ஜல்லிக்கட்டில் களம் காண உள்ளன. இதுதவிர தேனி ,திண்டுக்கல் ,விருதுநகர், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலும் உள்ள காளைகளும் அலங்காநல்லூரில் பங்கேற்க உள்ளன.

tn

இந்நிலையில் மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 16ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இன்று அதற்கான ஆயத்த பணிகள் தொடங்குவதற்கான முகூர்த்தக்கால் நிகழ்ச்சி நடைபெற்றது.  வாடிவாசல் அருகே உள்ள முத்தாலம்மன் கோவிலில் சிறப்பு பூஜை செய்து முகூர்த்த கால் நடப்பட்டது. இதில் அரசு அதிகாரிகள் , மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவில்லை.  அரசின் பிரதிநிதிகள் யாரும் பங்கேற்காமல் ஊர் விழா குழுவினர் மட்டும் முன்னேற்பாடு பணிகளை துவக்கினர். அரசு வழிகாட்டுதல்படி ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறும் . பார்வையாளர்கள் இல்லாமல் நடத்தலாம் என அரசு சொன்னால் அதன்படி போட்டிகள் நடத்தப்படும் என விழா குழு தெரிவித்துள்ளது.