மணல் பதுக்கல் வழக்கு- எம்.ஆர்.விஜயபாஸ்கர் 15 நாட்கள் போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராகி கையெழுத்திட உத்தரவு

 
vijayabaskar

சட்ட விரோதமாக மணல் பதுக்கி வைத்திருந்த  வழக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்  எம்.ஆர்.விஜயபாஸ்கர் 15 நாள் கரூர் நகர காவல் நிலையத்தில் கையெழுத்திட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

vijayabaskar


கரூர் மாவட்டம் ஆண்டாங்கோவில் கிழக்கு பகுதியில் அதிமுக முன்னாள்  அமைச்சரான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனக்கு சொந்தமான புதிய வீடு ஒன்றை கட்டி வருகிறார். இந்த வீட்டின் கட்டுமானப் பணிகளுக்காக, அரசின் அனுமதியில்லாமல் அதிகப்படியான ஆற்று மணலை பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக வருவாய் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்திருக்கிறது.இதையடுத்து, கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில், மணல் கடத்தல் மற்றும் பதுக்கல் தொடர்பாக 2026 பிப்ரவரி 13 அன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, அதிமுக நிர்வாகி தனபால் என்பவருக்கு சொந்தமான இடத்தில் அதிகாரிகள்  சோதனை நடத்தினர். அப்போது, அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த சுமார் 35 யூனிட் மணலை கண்டுபிடித்தனர். பின்னர், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் செய்தனர். காவிரி ஆற்று மணலை சட்ட விரோதமாக உரிய ஆவணங்கள் இன்றி பதுக்கி வைத்திருந்ததாக அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது கரூர் நகர காவல் நிலையத்தில் அண்மையில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் அவருக்கு நிபந்தனை முன்ஜாமின் அண்மையில் வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மார்ச் 31ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கி இருந்தது. இந்நிலையில் இந்த காலக்கெடுப்பை நீடிக்க கோரி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அப்போது தான் அதிமுக சார்பில் கரூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதால் இப்போது ஆஜராக இயலாது எனக் கூறி இந்த வழக்கில் மேலும் அவகாசம் வேண்டும் என கூறி மனு தாக்கல் செய்திருந்தார். மேலும், மார்ச் 31ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்வதாலும் 31ஆம் தேதி மகாவீர் ஜெயந்தி விடுமுறை என்பதாலும் நீதிமன்றத்தில் சரண் அடைய இயலவில்லை என்றும் கால அவகாசத்தை நீடிக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார். இதை அடுத்து அவருக்கு நீதிமன்றத்தில் சரண் அடைய ஏப்ரல் 28ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை அண்மையில் உத்தரவிட்டது. இந்நிலையில் நாளை நீதிமன்றத்தில் ஆஜராக கால அவகாசம் இருந்த நிலையில் ஒரு நாள் முன்பாகவே முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கரூர் குற்றவியல் நீதிமன்றம் எண் 1, நீதிபதி பரத் குமார் முன் ஆஜரானார். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி பரத்குமார் வரும் 29ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார். அதேபோன்று கரூர் நகர காவல் நிலையத்திலும் 15 நாள் கையொப்பமிட  நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது ஆதரவாளருடன் நீதிமன்றத்தில் இருந்து புறப்பட்டு சென்றார்.