‘தந்தைக்கு உடல்நிலை சரியில்லை’... எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன் ஜாமீன் கேட்டு மனு!

 
vijayabaskar

தனது தந்தை உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அவரது மருத்துவ மேல் சிகிச்சைக்கு உடன் இருக்க வேண்டும் என்பதால், இடைக்கால முன் ஜாமின் வழங்க வேண்டும் என கடந்த 16 நாட்களுக்கு மேலாக தலைமறைவாக இருந்து வரும் முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் கரூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை நாளை மாலைக்கு ஒத்திவைத்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே முன் ஜாமின் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட  மனு 3 முறை தள்ளுபடி செய்யப்பட்டு கடந்த 25-ம் தேதி முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 

இந்த நிலையில், ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலியான ஆவணம் கொடுத்து மோசடியாக சொத்தை எழுதி வாங்கியுள்ளார் என மேலக் கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல் காதர் கரூர் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் ரகு, யுவராஜ், செல்வராஜ் உட்பட 7 பேர்கள் மீது கொலை மிரட்டல், நில மோசடி உள்ளிட்ட 8 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரச்னைக்குறிய 22 ஏக்கர் நிலத்தின் உரிமையாளர் பிரகாஷ் கரூர் வாங்கல் காவல் நிலையத்தில்  அளித்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் , அவரது தம்பி சேகர், மற்றும் பிரவீன் உள்ளிட்ட 13 பேர்கள் மீது கொலை மிரட்டல், போலி ஆவணங்கள் கொடுத்து மோசடி செய்தல் உள்ளிட்ட 6 சட்டப்பிரிவுகள் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தனது தந்தைக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவ மேல் சிசிச்சைக்காக அவருடன் இருக்க வேண்டும் என்பதால் கரூர் நீதிமன்றத்தில் இடைக்கால முன் ஜாமின் கேட்டு எம் ஆர் விஜயபாஸ்கர் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சண்முகசுந்தரம் வழக்கை நாளை மாலை ஒத்தி வைத்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக தன்னை எப்போது வேண்டுமானாலும் கைது செய்யலாம் என கடந்த 16 நாட்களுக்கு மேலாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவாக இருந்து வருகிறார்.