எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் 2வது நாளாக தீவிர விசாரணை..

 
எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் 2வது நாளாக தீவிர விசாரணை.. 

 ₹100 கோடி நில மோசடி வழக்கில் கைதான அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் 2வது நாளாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 
ரூ.100கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நில அபகரிப்பு வழக்கில் தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது உறவினர் பிரவீன்(28) ஆகியோரை சிபிசிஐடி போலீஸார் கடந்த 16ம் தேதி கைது செய்தனர். மேலும் மோசடிக்கு உடந்தையாக இருந்த வில்லிவாக்கம் இன்ஸ்பெக்டர் பிரித்விராஜ் என்பவரும்  கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

vijayabaskar

இந்நிலையில், எம்.ஆர்.விஜயபாஸ்கரை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிசிஐடி போலீசார் கடந்த 20ம்தேதி கரூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.  இதற்காக நேற்று முன்தினம் பிற்பகல் 12 மணியளவில் திருச்சி சிறையில் இருந்து கரூர் அழைத்து வரப்பட்ட எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூர் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 1ல் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி பரத்குமார் 2 நாட்கள் மட்டும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்தார்.   

இதனையடுத்து எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் காந்தி கிராமம் சின்னப்பா நகரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்திவந்தனர். நேற்றிரவு 12 மணி வரை சிபிசிஐடி போலீசார் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் விசாரணை நடத்திய நிலையில், இன்று  2-வது நாளாக சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.   மதியம் 2.30 மணியுடன் நீதிமன்றம் வழங்கிய 2 நாள் காவல் முடிவதால் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த திட்டமிட்டுள்ளனர்.