“கரூர் மக்கள் ஏமாற மாட்டார்கள் என்று தெரிந்து கொண்டு செந்தில்பாலாஜி கோவை சென்று விட்டார்”- எம்.ஆர்.விஜயபாஸ்கர்

 
vijayabaskar

கரூர் அடுத்த சரஸ்வதி நகர், செல்வ நகர், எல்.என்.எஸ் தெரு, பாரதியார் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கரூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், பெண்கள் ஆரத்தி எடுத்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது பொதுமக்களிடையே பிரச்சார வாகனத்தில் நின்றபடி பேசிய எம்.ஆர்.விஜயபாஸ்கர், “செந்தில்பாலாஜி கடந்த தேர்தலில் கரூர் திமுக வேட்பாளர் கல்லு வெள்ளி கொலுசு கொடுத்து பொதுமக்களை ஏமாற்றி வெற்றி பெற்றார். ஸ்டாலின் முதலமைச்சரானால் 11.5 மணிக்கு மாட்டு வண்டியில் மணல் அள்ளலாம் என்று கூறினார். ஆனால், லாரியில் மணல் கொள்ளை நடக்கிறது. மணல் திருட்டை தடுத்து நிறுத்தியதற்காக என் மீது வழக்கு போட்டனர். பொய் வழக்குகளை நான் பார்த்துக் கொள்கிறேன். அதேபோல் அரவக்குறிச்சியில் 3 சென்ட் நிலம் தருவதாக கூறி ஏமாற்றினார். ஏமாற்றுவதில் அவர் பெரிய ஆள். 

டாஸ்மாக்கில் பல ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது. அந்த பணத்தை வைத்து தேர்தலில் வெற்றி பெறலாம் என்று நினைத்தார். இந்த முறை கரூர் மக்கள் ஏமாற மாட்டார்கள் என்று தெரிந்து கொண்டு தான், கோவை சென்று விட்டார். இங்கு அவருக்கு வேண்டிய ஒருத்தரை வேட்பாளராக நிறுத்தி இருக்கிறார். ஓட்டுக்கு 5000 ரூபாயும், தங்கம் கொடுப்பதாக கூறுகிறார்கள். உரசி பார்த்து உண்மையா என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அதிமுக ஆட்சியில் சொன்ன திட்டங்களை செய்து கொடுத்திருக்கிறோம். எனவே, இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு கொடுக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.