கொலை மிரட்டல் வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீண்டும் கைது

நில மோசடி வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கர் கொலை மிரட்டல் வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
நில மோசடி வழக்கில் கைதாகி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது ஏற்கனவே கரூர் மாவட்டம் வாங்கல் காவல் நிலையத்தில் பிரகாஷ் என்பவர் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆள் கடத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்த சிபிசிஐடி போலீசார், எம்.ஆர்.விஜயபாஸ்கரை சிறைக்குள் வைத்தே மீண்டும் கைது செய்தனர்.
கரூரில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் போலி ஆவணம் கொடுத்து பத்திரப்பதிவு செய்ததாக கூறப்படுகிறது. மேலக்கரூர் சார் பதிவாளர் முகமது அப்துல் காதர் நகர காவல் நிலையத்திலும், பிரகாஷ் வாங்கல் காவல் நிலையத்திலும் அளித்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் அவரது தம்பி சேகர் உட்பட 13 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.