எம்.பி.க்களுக்கு கிடுக்கிப்பிடி: பாராளுமன்றத்திற்குள் மின்னணு சாதனங்களை பயன்படுத்த தடை..!
சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் போது, திரிணமுல் காங்கிரஸ் எம்.பி. சவுகதா ராய் லோக்சபாவிற்குள் 'இ-சிகரெட்' பயன்படுத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு முன்பும் பல்வேறு தருணங்களில் எம்.பி.க்கள் பாராளுமன்ற நடவடிக்கைகளை விதிமீறி படம் பிடித்த சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. இத்தகைய ஒழுங்கீனமான செயல்களைத் தடுக்கும் பொருட்டு, லோக்சபா செயலகம் தற்போது அதிரடி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியில் ஸ்மார்ட் வாட்ச், ஸ்மார்ட் கூலிங் கிளாஸ் மற்றும் பென் கேமரா போன்ற அதிநவீன மின்னணு உபகரணங்கள் சந்தையில் தாராளமாகக் கிடைக்கின்றன. மிகச்சிறிய வடிவில் இருக்கும் இந்த சாதனங்கள் காட்சிகளையும் ஒலிகளையும் ரகசியமாகப் பதிவு செய்யும் வசதி கொண்டவை. இவற்றைத் தவறான முறையில் பயன்படுத்துவது பாராளுமன்ற மாண்பிற்கு எதிரானது என செயலகம் கருதுகிறது.
இத்தகைய ரகசியப் பதிவு செய்யும் கருவிகள் சக எம்.பி.க்களின் தனியுரிமையை (Privacy) பாதிப்பதோடு மட்டுமல்லாமல், நாட்டின் மிக உயரிய பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கும் பாராளுமன்ற வளாகத்திற்கே அச்சுறுத்தலாக அமையக்கூடும். எனவே, பாதுகாப்பு மற்றும் ரகசியத்தன்மையைப் பேணும் நோக்கில், இந்த விவகாரத்தில் கடுமையான வழிகாட்டுதல்கள் அவசியம் என லோக்சபா செயலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பாக அனைத்து எம்.பி.க்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையில், பாராளுமன்ற எஸ்டேட் வளாகத்திற்குள் எந்தப் பகுதியிலும் இத்தகைய மின்னணு சாதனங்களைப் பயன்படுத்தக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேவையற்ற சர்ச்சைகளைத் தவிர்க்கவும், சபையின் கண்ணியத்தைப் பாதுகாக்கவும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


