“பரந்தூர் விவகாரம்- மலிவான அரசியலை விஜய் கையில் எடுக்கக்கூடாது”- ஜோதிமணியின் பதில்

ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடாதது போல் சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிடாமல் போய்விடுவீர்களா? என பாஜக மற்றும் அதிமுகவிற்கு காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் (DISHA), கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி.ஜோதிமணி, “ஈரோடு இடைத்தேர்தல் மட்டுமல்ல வருகின்ற சட்டமன்ற தேர்தலிலும், தமிழ்நாட்டை பொறுத்த வரைக்கும் திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான இந்தியா கூட்டணி வெற்றி பெறும். தோற்று விடுவோம் என்ற பயத்தில் இடை தேர்தலில் நிற்காமல் போகலாம். நாளையும் தோற்க தான் போகிறீர்கள். அதற்காக சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிடாமல் போவீர்களா என அதிமுக, பாஜகவை பார்த்து கேட்கிறேன்.
பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிரான மக்கள் போராட்டத்திற்கு பின் கண்ணீரும், வலியும், வேதனையும் இருப்பதை தமிழக அரசு புரிந்து கொள்ளும். போராடும் மக்களுடன் உட்கார்ந்து பேசி யாருக்கும் பாதிப்பில்லாமல் வளர்ச்சி திட்டத்தை நிறைவேற்றுவது தான் ஒரு அரசின் கடமை. அதையே தமிழக அரசும் செய்கிறது. மக்களுக்கும், அரசுக்கும் இடையே விரைவில் புரிந்துணர்வு ஏற்படும். போராடும் மக்களை சந்திக்க செல்லக்கூடாது என விஜய்யை கூற முடியாது. அது சரியே என புரிந்து கொண்டு தான், விஜய் அங்கு செல்ல தமிழக அரசே அனுமதி கொடுத்துள்ளது. ஆனால் இது தேர்தல் காலம் இந்த நேரத்தில் புதிதாக அரசியல் கட்சியை தொடங்கியுள்ள விஜய், இந்த விஷயத்தை ஒரு மலிவான அரசியல் யுக்தியாக இதை பயன்படுத்தக் கூடாது என்பதுதான் என்னுடைய கருத்து” என்றார்.