வாகன ஓட்டிகள் உஷார்..! சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 10 முதல் பணமாக செலுத்த முடியாது..!
இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகளுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கவும் வருகிற ஏப்ரல் 10ம் தேதி முதல் சுங்கக்கட்டணத்தை பணமாக வசூலிக்கும் முறை முற்றிலுமாக ரத்து செய்யப்பட உள்ளது. இனி வாகன ஓட்டிகள் ஃபாஸ்டேக் மூலமாகவோ அல்லது டிஜிட்டல் முறையிலோ மட்டுமே கட்டணத்தை செலுத்த முடியும். இதற்கு முன்பு வரை FASTag இல்லாமல் பணமாக கொடுத்தால் இரட்டிப்பு கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் FASTag முறை முழுமையாக அமலுக்கு வந்தது. அதன் பிறகு அனைவரும் இந்த FASTag முறையை பின்பற்ற தொடங்கினர். இருப்பினும், ஒருசில நேரங்களில் தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாகவோ அல்லது FASTag-ல் போதிய பணம் இல்லாதபோதோ சுங்கச்சாவடிகளில் நேரடியாக பணத்தை செலுத்தி வாகன ஓட்டிகள் பயணித்து வந்தனர். இத்தகைய சமயங்களில் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. மேலும், ஒருசில இடங்களில் சுங்கச்சாவடி ஊழியர்கள் பணத்தை வாங்க மறுப்பதால் வாக்குவாதங்கள் ஏற்படும் சம்பவங்களும் நடைபெற்று வந்தன. அதேபோல, போலியான அடையாள அட்டைகளை காட்டிசிலர் சுங்கக்கட்டணம் செலுத்தாமல் செல்வதும் தொடர்கதையாகி வந்தது. இந்த நிலையில்தான் மத்திய அரசு தற்போது இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.
வருகிற ஏப்ரல் 10ம் தேதி முதல் சுங்கச்சாவடியை கடக்கும் ஒவ்வொரு வாகனமும் கட்டாயமாக FASTag வைத்திருக்க வேண்டும். வாகன ஓட்டிகள் அதன் வழியாக மட்டுமே கட்டணத்தை செலுத்த வேண்டும். ஒருவேளை உங்களிடம் FASTag இல்லை என்றாலோ அல்லது அதில் பணம் இல்லை என்றாலோ, நீங்கள் UPI மூலமாக கட்டணத்தை செலுத்தி கொள்ளலாம் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
தற்போது வரை FASTag-ல் பணம் இல்லை என்றால், நேரடியாக பணமாக கொடுக்கும் பட்சத்தில் வழக்கமான கட்டணத்தை விட இரண்டு மடங்கு அபராதமாக வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது அமலுக்கு வரவுள்ள இந்த புதிய விதிகளின்படி, பணமாக செலுத்தும் முறை முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. FASTag இல்லாத வாகனங்கள் அல்லது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக FASTag வேலை செய்யாத நேரங்களில், வாகன ஓட்டிகள் UPI மூலம் மட்டுமே கட்டணத்தை செலுத்த வேண்டும். அப்படி UPI மூலம் செலுத்தும்போது, வழக்கமான கட்டணத்தை விட 1.25 மடங்கு கூடுதலாக செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சுங்கச்சாவடியை கடக்கும்போது FASTag இல்லை என்றாலோ, அல்லது தொழில்நுட்ப கோளாறு காரணமாக தானாகபணம் எடுக்கப்படாவிட்டாலோ என்ன செய்வது என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். இதற்கும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பதிலளித்துள்ளது. தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக FASTag-லிருந்து பணம் எடுக்க முடியவில்லை என்றால், அந்த வாகனங்கள் சுங்கச்சாவடியை கட்டணம் செலுத்தாமல் கடக்க அனுமதிக்கப்படும். இருப்பினும், அந்த வாகனத்தின் பதிவு எண்ணை கொண்டு, வாகன உரிமையாளரின் மொபைல் எண்ணுக்கு இ-சலான் அல்லது இ-நோட்டீஸ் உடனடியாக அனுப்பப்படும். அதன் மூலம் வாகன ஓட்டிகள் ஆன்லைனில் சுங்கக்கட்டணத்தை செலுத்திக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இ-நோட்டீஸ் வந்த அடுத்த 72 மணி நேரத்திற்குள், அதாவது அடுத்த மூன்று நாட்களுக்குள் ஆன்லைன் மூலமாக கட்டணத்தை செலுத்த வேண்டும். அப்படி செலுத்தினால் எந்தவித அபராதமும் இல்லாமல் வழக்கமான சுங்கக்கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதுமானது. 72 மணி நேரத்திற்கு பிறகும் நீங்கள் கட்டணத்தை செலுத்தவில்லை என்றால், அபராதமாக இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும். ஒருவேளை 15 நாட்களுக்கு மேல் கட்டணம் செலுத்தாமல் இருந்தால், அந்த குறிப்பிட்ட வாகனத்தின் விவரங்கள் மத்திய அரசின் வாஹன் சிஸ்டத்தில் பதிவு செய்யப்படும். அதன் பிறகு அந்த வாகன உரிமையாளர் மீது கடுமையான சட்டபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் எச்சரித்துள்ளது. எனவே, சுங்கச்சாவடிகளில் தேவையில்லாமல் அபராதங்கள் கட்டுவதை தவிர்க்கவும், பயண நேரத்தை மிச்சப்படுத்தவும், வாகன ஓட்டிகள் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும்போது FASTag-ல் போதுமான கட்டணத்தை முன்கூட்டியே ரீசார்ஜ் செய்து வைத்துக்கொள்வது நல்லது.



