அன்னையர் தினம்: தலைவர்கள் வாழ்த்து..

 
அன்னையர் தினம்: தலைவர்கள் வாழ்த்து..

அன்னையர் தினத்தையொட்டி பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பாமக நிறுவனர் ராமதாஸ் : “அன்பு, அறிவு, அனுபவம், தியாகத்தின் திருவுருவம் அன்னையர்களே... அவர்களை எந்நாளும் வணங்குவோம்.  குழந்தைகளை உலகிற்கு கொண்டு வருவது மட்டுமின்றி, அவர்களுக்கு அன்பு, அறிவு, தமது அனுபவத்தின் மூலம் கிடைத்த பாடம் ஆகியவற்றை வழங்கி, எண்ணற்ற ஈகங்களை செய்து சாதனையாளர்களாக மாற்றுவது  அன்னையர் தான்.  அவர்களின்றி நாம் இல்லை. இந்த அடிப்படை உண்மையை மனதில் கொண்டு, எந்நாளும் அவர்களை வணங்குவோம், போற்றுவோம்! ” என்று கூறியுள்ளார்.


பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் : “பிள்ளைகளின் முதல் கடவுள் அன்னை; அவர்களின் தியாகத்தை மதித்து எந்நாளும் போற்றுவோம்!!  உலகின் அனைத்து மனிதர்களுக்கும் முதல் கடவுள் அவர்களின் அன்னை தான். ஆக்கவும் காக்கவும் மட்டுமே தெரிந்த, அழிக்கத் தெரியாத கடவுள் அன்னை மட்டும் தான். அவர்களின் ஈகத்தை எத்தனை பிறவிகள் எடுத்தாலும் அடைக்க முடியாது. உலக அன்னையர் நாளான இன்று மட்டுமின்றி எந்நாளும் அவர்களின்  ஈகத்தை மதித்து முதல் கடவுள்களை போற்றுவோம்! ” என்று தெரிவித்தார்.


அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி: “நம்மை இவ்வுலகுக்கு அறிமுகப்படுத்திய முதற்கடவுளாய், நற்பண்புகள் நிறைந்தவர்களாக வளர்த்தெடுத்து நல்வழிப்படுத்தும் ஆசானாய், தன்னலமில்லா அன்பின் ஊற்றாய், எப்போதும் நமக்கு உற்ற உறுதுணையாய் நின்று, என்றும் நிகரற்ற உறவாக விளங்கும் தியாக உள்ளம் நிறைந்த அனைத்து அன்னையருக்கும், இனிய அன்னையர்தினம் நல்வாழ்த்துகள்.” என்று குறிப்பிட்டுள்ளார். 


 ஓ.பன்னீர்செல்வம் : “தனித்துவம் பெற்ற அன்பை, யாருடனும் ஒப்பிட முடியாத, அளவிட முடியாத அன்பை, கற்பனை செய்ய முடியாத பாசத்தை அள்ளித் தரும் தாயின் தன்னலமற்ற தியாகத்தைப் போற்றும் வகையில் கொண்டாடப்படும் அன்னையர் தினமான இன்று அனைத்து தாய்மார்களுக்கும் எனது அன்னையர் தின வாழ்த்துகளை மட்டற்ற மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.