தாய்மாமன் சீர் சரி, அத்தை சீர் யார் தருவா? - சவுமியா அன்புமணி எழுப்பிய சுவாரசிய கேள்வி!
சட்டப்பேரவையில் பேசிய சவுமியா அன்புமணி, “தமிழகத்தில் அரசுத் திட்டங்களுக்குப் பெயர் வைப்பதில் பெரிய போட்டியே நடக்கிறது. தவெக அரசு சார்பில் ‘அண்ணன் சீர்’, ‘தாய்மாமன் சீர்’ என்றெல்லாம் சீர் வரிசை திட்டங்களை அள்ளித் தருகிறார்கள். தாய்மாமனாக இருந்து விஜய் சீர் கொடுத்து விடுவார்; ஆனால் பாசத்தோடு இருக்கும் அத்தை சீர், பாட்டி சீர் எல்லாம் யார் கொடுப்பார்கள்?” என நையாண்டியாகக் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், பெயரளவில் மட்டுமே சீர் வரிசை திட்டங்களை அறிவிக்காமல், தமிழக மக்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் உண்மையான நலத்திட்டங்களுக்கு அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார். குறிப்பாகக் கூட்டுறவு மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள அனைத்துக் கடன்களையும் நிபந்தனையின்றி முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் முதன்மையான எதிர்பார்ப்பாக உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசின் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் தற்காலிக மகிழ்ச்சியைத் தந்தாலும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவது, வேலைவாய்ப்புகளை உருவாக்குவது மற்றும் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வது போன்ற நிலையான நடவடிக்கைகளே மக்களுக்கு உண்மையான பலனைத் தரும் என்று சவுமியா அன்புமணி கூறினார்.

