கொதிக்கும் எண்ணெயில் விழுந்த குழந்தை... உயிரை காப்பாற்ற அரசின் உதவியை நாடும் தாய்
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நான்கு வயது குழந்தை மீது கொதிக்கும் எண்ணெய் கொட்டியதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. லட்சக்கணக்கில் மருத்துவ செலவு ஆகும் என்பதால் குழந்தையின் தாய், வாட்ஸ் அப் மூலம் வேண்டுகோள் விடுத்ததால் பலரும் உதவி கரம் நீட்டி வருகின்றனர்.

கோடை வாசஸ்தலமான ஏற்காட்டில் உள்ள ஜெரினாக்காடு பகுதியை சேர்ந்தவர் இமானுவேல். இவரது மனைவி கீர்த்தனா(30). இவர்களது மகன் பிளஸ்வின்(4). இமானுவேல் கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு புற்றுநோய் பாதிப்பில் இறந்து விட்டார். இதனால் கூலி வேலைக்கு செல்லும் பிரவீனா, தனது இரண்டு குழந்தைகளுடன் ஜெரினா கார்டு பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வீட்டில் சமையல் செய்து விட்டு கொதிக்கும் எண்ணெய்யை கீழே இறக்கி வைத்துள்ளார். அப்போது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த நான்கு வயது குழந்தை பிளஸ்வின் தவறுதலாக எண்ணை பாத்திரத்தின் மீது விழுந்ததால், கொதிக்கும் எண்ணெய் குழந்தையின் உடல் முழுவதும் கொட்டியது. இதில் குழந்தையின் உடலில் கொப்பளங்கள் ஏற்பட்டு குழந்தை அலறி துடித்தது.
உடனே தாய் கீர்த்தனா, தனது உறவினர்களுடன் குழந்தையை தூக்கி கொண்டு சேலம் மெய்யனூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குழந்தையின் உயிரை காப்பாற்ற பல லட்ச ரூபாய் செலவாகும் என தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கூலி வேலைக்கு செல்லும் தாய் கீர்த்தனா அரசு உதவியை எதிர்பார்த்து உள்ளார். மேலும் இது குறித்து கீர்த்தனாவின் உறவினர்கள் whatsapp மூலமாக உதவி கேட்டு வேண்டுகோள் விடுத்தனர். இதன் காரணமாக பலரும் குழந்தையின் உயிரை பாதுகாக்க தங்களால் இயன்ற உதவியை வழங்கி வருகிறார்கள். ஆனாலும் அரசு தங்கள் குழந்தையை காப்பாற்ற உதவி செய்ய வேண்டும் என கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதனிடையே தகவல் அறிந்த தன்னார்வலர்கள் சிலர் நேரடியாக மருத்துவமனைக்கு வந்து தங்களால் இயன்ற நிதியை உதவியாக வழங்கி வருகின்றனர்.


