தனது வயிற்றில் இருந்த பெண் சிசுவை கலைக்க கூறியதால் ஒரு வயது குழந்தையுடன் தாய் தற்கொலை
திருவண்ணாமலை அருகே உள்ள கருக்கலைப்பு செய்ய வற்புறுத்தியதால் தனது ஒரு வயது குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் அடுத்த கரிக்கலாம்பாடி கிராமத்தை சேர்ந்த விவசாயி விக்னேஷின் மனைவி உமாதேவி. இவர்களுக்கு திருமணமாகி 2 வருடமாகி ஒரு வயது பெண் குழந்தை மேகனா உள்ளனர். இந்நிலையில் அவர்களது வீட்டின் அருகே உள்ள கிணற்றில் தாய் உமாதேவி (வயது 25) மற்றும் ஒரு வயது குழந்தை மேகனாவுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் கீழ்பென்னாத்தூர் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் காவல் துறையினர் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தாய் உமாதேவி மற்றும் குழந்தை மேகனா சடலத்தை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து கீழ்பென்னாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையா? தற்கொலையா? வேறு ஏதாவது காரணங்களா என பல்வேறு கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இந்த தற்கொலை சம்பந்தமாக அவரது கணவர் விக்னேஷ், மாமனார் ஜெயவேல், மாமியார் சிவகாமி இவர்களுடன் சேர்ந்து அதே கிராமத்தை சேர்ந்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் உமாதேவிக்கு இரண்டாவது முறை கர்ப்பமாகி 4 மாதம் ஆகிய நிலையில் அதுவும் பெண் குழந்தையாக இருக்குமோ? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அதே கிராமத்தை சேர்ந்த ஒருவருடன் சேர்ந்து திருப்பதியில் ஆணா? பெண்ணா? என்று பரிசோதித்து பார்த்துள்ளனர். அதில் பெண் குழந்தை என்பது தெரிய வந்தவுடன் கருவை கலைக்குமாறு உமாதேவியிடம் கணவர் உட்பட 4 பேரும் தொடர்ந்து கூறியுள்ளனர்.

இதனை மறுத்த உமாதேவி திடீரென அவர்களது வீட்டின் அருகே உள்ள விவசாய கிணற்றில் தனது ஒரு வயது குழந்தையுடன் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து அந்த 4 பேரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கில் உமாதேவியின் கணவர் மாமனார் மாமியாரை தற்பொழுது காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கருக்கலைப்புக்கு உடந்தையாக இருந்து செயல்பட்ட அதே கிராமத்தைச் சேர்ந்தவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


