2 குழந்தைகளுடன் தாய் ரயில் முன் பாய்ந்து தற்கொலை - கிருஷ்ணகிரியில் பெரும் சோகம்

 
train track

கிருஷ்ணகிரி அருகே குடும்ப பிரச்சினை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கும், அம்மு என்பவருக்கு கடந்த 11 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடபெற்றது. இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகளும், 4 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.  இந்த நிலையில், சுரேஷ் கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல், மது அருந்தி விட்டு வெட்டியாக சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அம்முவுக்கும், சுரேஷிற்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது. இதேபோல் நேற்று இரவில் இருந்து இன்று காலை வரை சுரேஷிற்கும் அம்முவுக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதனால் மனமுடைந்த அம்மு இரண்டு குழந்தைகளுடன் சேர்ந்து தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளார். இந்நிலையில், வீட்டின் அருகேயுள்ள ரயில் தண்டவாளத்தில், ரயில் வரும் போது இரண்டு குழந்தைகளையும் தள்ளிவிட்டு அம்முவும் தற்கொலை செய்துகொண்டுள்ளார். கல்லாவி ரெயில் தடத்தில் சடலங்களை கண்ட அப்பகுதி மக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ரெயில்வே போலீசார் 3 சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.