10 மாத குழந்தையை தவிக்கவிட்டு தாய் தற்கொலை
எடப்பாடி அருகே 10 மாத பெண் குழந்தையை விட்டு தாய் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட கவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் - நெருஞ்சிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த அபிராமி ஆகியோருக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு தற்போது 10 மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் கணவன் – மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறின் காரணமாக அபிராமி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கோபாலகிருஷ்ணன், அபிராமி எடப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது தாயார் மீனாவுக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து பதறியடித்துக் கொண்டு அபிராமியின் தாயார் மீனா மற்றும் குடும்பத்தினர் எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து அபிராமியின் உடலை பார்த்து கதறி அழுதனர். அதனைத் தொடர்ந்து, தனது மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி அபிராமியின் தாயார் மீனா எடப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அபிராமி குடும்பத் தகராறின் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் எடப்பாடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 10 மாத பெண் குழந்தையை விட்டு இளம் தாய் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


