10 வயது மகனுக்கு சூடு வைத்து கொடுமைப்படுத்திய தாய்

 
சூடு

பொள்ளாச்சி அருகே 10 வயது மகனுக்கு சரமாரியாக சூடு வைத்த தாயிடம் மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.

சூடு

பொள்ளாச்சி அருகே உள்ள பாலமநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகப்பிரியா(25). இவருக்கு 14 வயதில் அதே பகுதியைச் சேர்ந்த குமரேசன் என்பவருடன் திருமணம் ஆனது. இருவருக்கும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் ஒரு வருடத்தில் அவரது கணவர் இவரை பிரிந்து சென்றதாக தெரிகிறது. 

இதையடுத்து, 22 வயதில் சண்முகப்பிரியா, பொள்ளாச்சியை சேர்ந்த காளிதாஸ்(27) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதில் அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.   தற்போது, சண்முகப்பிரியா 3 குழந்தைகள் மற்றும் கணவர் காளிதாசனுடன் பாலமநல்லூர் பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் 10 வயதான அவரது முதல் மகன் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வருவதாகவும், சொல்பேச்சு கேட்காமல் இருப்பதாகவும் கூறி அவரை தாக்கி சூடு வைத்ததாக கூறப்படுகிறது. 

இதுதொடர்பாக, அருகிலிருந்த பொதுமக்கள் குழந்தைகள் நல உதவி மையத்தில் புகார் அளித்தனர். இதனடிப்படையில், நேற்று 10 வயது சிறுவன் மற்றும் அவரது பெற்றோர்களை அழைத்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் ஏஞ்சலின் விசாரணை மேற்கொண்டார். பின்னர் பாதுகாப்பு கருதி சிறுவனை கோவையில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கு அழைத்து சென்றனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக அவரது பெற்றோரிடம் விசாரணை மேற்கொள்ள உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.