காதலை கைவிட மறுத்த மகளுக்கு முட்டை பொரியலில் எலி பேஸ்ட் கலந்துகொடுத்த தாய்

 
s

கள்ளக்குறிச்சியில் இன்ஸ்டாகிராம் மூலம் காதல் வசப்பட்ட மகளை கண்டிப்பதாக கூறி முட்டை பொறியலில் எலி பேஸ்ட் கலந்து கொடுத்து கொலை செய்ய முயன்ற தாய் கைது செய்யப்பட்டார். 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள புதுப்பட்டு கிராமத்தைச் சார்ந்த முனுசாமி மகள் குறிஞ்சி என்பவர்  தனியார் கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் குறிஞ்சி, சாய்குமார் என்ற நபரை இன்ஸ்டாகிராம் மூலம் பழகி காதல் வசப்பட்டு உள்ளார். இதை அறிந்த அவரது தாய் மல்லிகா என்பவர் குறிஞ்சி காதல் செய்த நபர் சாய்குமாரிடம் பேச்சுவார்த்தை வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் காதலை கைவிடமாறும்  கூறியுள்ளார். அதை ஏற்க மறுத்த குறிஞ்சி தாய் மல்லிகாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். 

இதனை அடுத்து காதலிப்பவருடன் பேச மறுத்த தனது மகளை கொலை செய்ய முடிவு செய்த அவரது தாய் மல்லிகா முட்டை பொரியலில் எலி பேஸ்ட்டை கலந்து அதனை தனது மகள் குறிஞ்சியிடம் கொடுத்துள்ளார். எலி பேஸ்ட் கலந்த முட்டை பொரியலை சாப்பிட்ட குறிஞ்சி சற்று நேரத்தில் வாயில் நுரை தள்ளியவாறு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை உறவினர்கள் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த வடபொன்பரப்பி காவல்துறையினர் காதலைக் கைவிட மறுத்த மகளுக்கு முட்டை பொரியல் எலி பேஸ்ட் கலந்து கொடுத்து கொலை செய்ய முயன்ற தாய் மல்லிகா என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.