ஐரோப்பாவை உலுக்கிய வரலாற்று காணாத வெப்ப அலை: பிரான்ஸ், பெல்ஜியத்தில் மட்டும் 3,200-க்கும் மேற்பட்டோர் பலி!
ஐரோப்பிய கண்டத்தில் கடந்த ஜூன் 20 முதல் 28 வரையிலான காலகட்டத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் வெயில் வாட்டி வதைத்தது. வரலாறு காணாத வெப்பம் காரணமாக மின்சார தேவை அதிகரித்த அதே வேளையில், மின் உற்பத்தி உட்கட்டமைப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டு மின் தட்டுப்பாடு ஏற்பட்டது.
வெப்ப பாதிப்பு காரணமாக மருத்துவமனைகளில் நோயாளிகளின் வரத்தும் அதிகரித்தது. அதீத வெப்பத்தின் காரணமாக சாலைகள், ரயில் தண்டவாளங்கள் உள்ளிட்ட பொது உட்கட்டமைப்புகள் பல இடங்களில் சேதமடைந்தன.வெப்ப அலையின் கொடூர தாக்குதலுக்கு பிரான்ஸ் நாடுதான் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மட்டும் 2,025 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
குறிப்பாக, 45 வயதிற்கு மேற்பட்டவர்களே இதில் அதிகம்.அதற்கு அடுத்தபடியாக பெல்ஜியத்தில், 1,200 பேர் வெயிலின் தாக்கம் தாங்காமல் உயிரிழந்துள்ளனர். இதில் 85 வயதிற்கு மேற்பட்ட முதியோர் 530 பேரும், 65 வயதிற்குட்பட்டோர் 180 பேரும் அடங்குவர். நெதர்லாந்திலும் வெப்பத்தின் கோரத்தாண்டவத்திற்கு 480 பேர் பலியாகியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் 80 வயதைக் கடந்தவர்கள்.உலகளவில் அதிகரித்து வரும் புவி வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாற்றமே இந்த அதீத வெப்ப அலைக்கு மிக முக்கியக் காரணம் என்று சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் திட்டவட்டமாக கூறுகின்றனர்.
மனிதர்களின் செயல்பாடுகளால் இயற்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், சாதாரண வெயிலைக் கூட உக்கிரமான வெப்ப அலையாக மாற்றியுள்ளதாக அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

