பேரதிர்ச்சி!15 மாணவர்களுக்கு எலி காய்ச்சல்- நெல்லை பி.எஸ்.என் கல்லூரிக்கு சீல்

 
ச் ச்

நெல்லையில் தனியார் பொறியியல் கல்லூரியில் சுகாதாரமில்லாத தண்ணீர் பயன்பாடு காரணமாக 15 மாணவர்களுக்கு எலிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Image

நெல்லை திடியூர் பகுதியில் பிரபல தனியார் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் 2000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படிக்கின்றனர். வெளியூரை சேர்ந்த மாணவர்களும் படிப்பதால் இங்கேயே தங்கி இருந்து படிப்பதற்காக அவர்களுக்கு தங்கும் விடுதியும் கல்லூரி உள்ளேயே செயல்பட்டு வருகிறது. கல்லூரியின் அருகே நம்பியாற்றில் இருந்து உபரி நீர் சென்று கொண்டிருக்கிறது. இதை கல்லூரி நிர்வாகத்தினர் மாணவர்கள் பயன்படுத்தும் குடிநீர், உணவு தயாரிப்பது உள்ளிட்ட கல்லூரி பயன்பாடுகளுக்காக எந்தவித சுத்திகரிப்பும் இல்லாமல் சேகரித்து பயன்படுத்தி வந்துள்ளனர். இதனால் கல்லூரியில் விடுதிகளில் தங்கி இருந்து படிக்கும் 8 மாணவர்களுக்கு தலைவலி, காய்ச்சல், உடல் வலி என உடல் நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட பொது  சுகாதாரத்துறை நோய் தடுப்பு மருந்து துறை  அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது. 

Image


அதன் அடிப்படையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தற்போது கல்லூரி தங்கும் விடுதிகள், உணவு தயாரிக்கும் உணவு கூடங்கள், குடிநீர் தேக்கி வைக்கும் தொட்டிகளில் தீவிர ஆய்வு நடத்தினர்.  அப்போது சுகாதாரமில்லாத தண்ணீர் பயன்படுத்தப்பட்டிருப்பது, வளாகங்கள் சுகாதாரமில்லாமல் இருப்பது உறுதியானது. உடல் நலம் பாதிக்கப்பட்ட மாணவர்களிடமிருந்தும் அவர்கள் பயன்படுத்திய தண்ணீர் குறித்தும் மாதிரி பரிசோதனை செய்யப்பட்டதிலும் சுகாதாரம் இல்லாத தண்ணீரை பயன்படுத்தியது தெரிந்தது. அதிரடியாக  சுகாதாரத்துறை அதிகாரிகள் சுகாதாரமான முறையில் மாணவர்களுக்கு குடிநீர், உணவுகள் உள்ளிட்ட அனைத்து பயன்பாடுகளுக்கும் சுகாதாரமான குடிநீர் உள்ளிட்ட வசதிகளை ஏற்பாடு செய்யும் வரை கல்லூரியை மூடுவதற்கு நோட்டீஸ் வழங்கி உத்திரவிட்டனர். அதன் அடிப்படையில் கல்லூரி நிர்வாகத்தினர் தேதி  குறிப்பிடாமல் கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட 15 மாணவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர்களது ரத்த மாதிரிகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வுக்கு அனுப்பி சோதனை செய்தனர். அதில் அவர்களுக்கு எலிக்காச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் மாணவர்களை கண்காணித்து வருகின்றனர். கல்லூரியையும் சுத்தப்படுத்துமாறு நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சுகாதாரத் துறையினர் கல்லூரிக்கு சீல் வைத்துள்ளனர்.