சென்னை ஒன் செயலியை 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்து சாதனை!
இந்தியாவிலேயே முதன் முறையாக அனைத்து பொது போக்குவரத்துகளையும் இணைக்கும் வகையில் ஐ.ஓ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்டு தளங்களில் செயல்படக்கூடிய ‘சென்னை ஒன்று’ (‘சென்னை ஒன்’) செல்போன் செயலி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த செயலி பஸ், மின்சார ரெயில், மெட்ரோ ரெயில் மற்றும் டாக்சி, ஆட்டோக்களை ஒரே ‘கியூ.ஆர்.’ பயணச்சீட்டு மூலம் ஒருங்கிணைக்கிறது. இதன் மூலம் பொதுமக்கள் பஸ்கள், மெட்ரோ மற்றும் மின்சார ரெயில்களின் நிகழ்நேர இயக்கங்களை அறிந்து கொள்ளவும், யு.பி.ஐ. அல்லது கட்டண அட்டைகள் வழியாக பயணச்சீட்டுகளை பெற்றிடவும், ஒரே பயண பதிவின் மூலம் அனைத்து போக்குவரத்து முறைகளிலும் பயணம் செய்யவும் முடியும்.
சென்னை ஒன் செயலியை முதல் நாளிலேயே 1.29 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். 4,000க்கும் மேற்பட்டோர் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். GPS மூலம் பேருந்து எங்கே இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். அருகில் உள்ள பேருந்து நிறுத்தம் எது என்றும் தெரிந்து கொள்ளலாம்.
நேரலை வழித்தடங்கள் மற்றும் அட்டவணையை பார்க்கலாம். UPI மூலம் டிக்கெட் வாங்கலாம். பேருந்தில் ஏறியதும், டிக்கெட்டை ஸ்கேன் செய்தால் போதும். டிக்கெட் நாள் முழுவதும் செல்லுபடியாகும்.
மெட்ரோ, MRTS, புறநகர் ரயில் மற்றும் MTC பேருந்துகளையும் இந்த செயலி இணைக்கிறது. சில குறைகள் இருந்தாலும், சென்னை மக்களின் பயணத்தை எளிதாக்க இந்த செயலி வந்துள்ளது.
செயலியைப் பயன்படுத்துவது எப்படி?
கூகுள் பிளே ஸ்டோரில் ‘சென்னை ஒன்’ செயலியைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
மாநகரப் பேருந்து, சென்னை மெட்ரோ ரயில் மற்றும் சென்னை புறநகர் ரயில் சேவைகளுக்கு தனித்தனியாக பயணச்சீட்டு பெற்றுக் கொள்ளும் வசதி முகப்பு பக்கத்திலேயே கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், புறப்படும் இடம் மற்றும் சென்றுசேரும் இடத்தை பதிவிட்டு பயண வழித்தடத்தை பார்க்க முடியும். உதாரணமாக தாம்பரத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் செல்வதற்கான போக்குவரத்து வழித்தடத்தைப் பதிவிட்டால், அனைத்துவித சேவைகளும் காண்பிக்கப்படும்.
தாம்பரத்தில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு மாநகரப் பேருந்து வழித்தடம், பேருந்து எண், எவ்வளவு நேரத்தில் வரும், எவ்வளவு நேரத்துக்கு ஒருமுறை பேருந்து இயக்கப்படும் உள்பட அனைத்து விவரங்களையும் காண முடியும்.
பேருந்தில் மட்டும் பயணம் செய்ய வேண்டுமென்றால், சாதாரண பேருந்து, சொகுசுப் பேருந்து, குளிர்சாதனப் பேருந்து ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து ஆன்லைன் மூலம் கட்டணத்தை செலுத்தலாம். பேருந்தில் ஏறியவுடன் ஓட்டுநரிடம் ஆன்லைன் பயணச்சீட்டை காண்பித்து, அவர்கள் கூறும் ஓடிபியை உள்ளிட வேண்டும்.
இதே வழித்தடத்தில் புறநகர் ரயில் சேவையைப் பயன்படுத்துவோர், அதற்கான பயணச்சீட்டைப் பெறலாம்.
மேலும், தாம்பரத்தில் இருந்து மாநகரப் பேருந்து மூலம் விமான நிலையம் சென்று, அங்கிருந்து மெட்ரோ ரயில் மூலம் சென்னை சென்ட்ரல் செல்லும் வழித்தடத்தை தேர்வு செய்தால், ஒரே பயணச்சீட்டில் இரண்டு வகை போக்குவரத்தையும் பயன்படுத்த முடியும். தனித்தனியாக பயணம் மேற்கொண்டால் வசூலிக்கப்படும் கட்டணத்தைவிட குறைவான கட்டணமே வசூலிக்கப்படுகிறது.

