ஆகஸ்டில் இயல்பைவிட அதிக மழை பதிவாகும்..!!
ஆகஸ்ட் மாதத்தில் தமிழகத்தில் இயல்பைவிட அதிக மழைப்பொழிவு பதிவாகும் என தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 2ம் தேதி முதல் ஆகஸ்ட் 5ம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. குறிப்பாக ஆக.2 அன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், ஆக.3 அன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிவாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுவை & காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் தமிழ்நாட்டில் இயல்பை விட அதிக மழைப்பொழிவு பதிவாகும் எனவும், குறிப்பாக முதல் 2 வாரங்களில் பெரும்பாலான மாவட்டங்களில் நல்ல மழை பதிவாகும் என்றும் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரன் கணித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “கடல் சார்ந்த அலைவுகளின் தாக்கம் இந்தியப் பெருங்கடலில் காணப்படுகிறது. குறிப்பாக ராஸ்பி அலைவின் காரணமாக தெற்கு வங்கக் கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்று சுழற்சி உருவாகக் கூடும்.
இச்சுழற்சி மிகமெதுவாக வடதமிழ்நாடு & தெற்கு ஆந்திர கடலோரம் நோக்கி நகரக் கூடும்.
இதன் காரணமாக ஆகஸ்ட் 2 முதல் 15 வரையிலான காலக்கட்டத்தில் தமிழ்நாட்டின் வடகடலோரம், வடக்கு உள் மாவட்டங்கள், டெல்டா, மத்திய உள் மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்கள் என ஒட்டுமொத்த மாநிலத்திலும் பரவலாக வெப்பச்சலன இடி மழை தீவிரமடைந்து மழைப் பொழிவை கொடுக்கும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.


