உலக நாடுகளை அச்சுறுத்தும் குரங்கு அம்மை.. தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் வைக்கும் கோரிக்கை ..

 
TTV

உலக நாடுகளை அச்சுறுத்தும் குரங்கு அம்மை நோய்த்தொற்று தமிழகத்திற்குள் பரவுவதை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.  

காங்கோ, மத்திய ஆப்பிரிக்கா உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட நாடுகளில் குரங்கு அம்மை  பரவியுள்ளது.  ஆப்ரிக்க நாடுகளில் மட்டும் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன்  குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட 10ல் ஒருவர் இறக்க வாய்ப்பு உள்ளதால், உலகளாவிய சுகாதார அவசர நிலையை உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது வரை குரங்கு அம்மை பாதிப்பு இல்லை என்றாலும்,  குரங்கு அம்மை  தடுப்பு நடவடிக்கைக்கான  வழிகாட்டுதல்களை தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறை வெளியிட்டுள்ளது. 

M Pox

இந்த நிலையில் உலக நாடுகளை அச்சுறுத்தும் குரங்கு அம்மை நோய்த்தொற்று தமிழகத்திற்குள் பரவுவதை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.  இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் குரங்கு அம்மை நோய்த்தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், சர்வதேச பொது சுகாதார அவசர நிலையை அறிவித்திருக்கும் உலக சுகாதார நிறுவனம், அனைத்து நாடுகளும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளது. 

உலக சுகாதார நிறுவனத்தின் எச்சரிக்கையை கவனத்துடன் பின்பற்றி குரங்கு அம்மை நோய்த்தொற்றை தமிழகத்திற்குள் நுழையவிடாமல் தடுப்பதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்வதோடு, குரங்கு அம்மை நோய்த்தொற்று குறித்து பொதுமக்களுக்கு போதுமான விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். ” என்று குறிப்பிட்டுள்ளார்.