குரங்கு அம்மை : பிரத்யேக வார்டு தொடக்கம்.. 200 மருத்துவர்களுக்கு பயிற்சி - அமைச்சர் மா.சு தகவல்..

 
ma subramanian

குரங்கு அம்மை சிகிச்சை அளிப்பது தொடர்பாக 200 மருத்துவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.  

MPox எனப்படும் குரங்கம்மை நோய்   100க்கும் மேற்பட்ட நாடுகளில்  பரவியிருக்கிறது.  ஆப்ரிக்க நாடுகளில் மட்டும் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன்  குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட 10ல் ஒருவர் இறக்க வாய்ப்புள்ளதால் உலகளாவிய சுகாதார அவசர நிலையை உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.  இதனை அடுத்து  இந்திய அரசும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து வருபவர்களை, பரிசோதனை செய்தபிறகே அனுமதிக்க விமான நிலைய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து அரசு மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிர படுத்தவும் மத்திய அரசு உத்தரப்பட்டுள்ளது. நோய் அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக மருத்துவமனையை அணுக வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 

M Pox

இந்நிலையில், குரங்கு அம்மை சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பிரத்யேக வார்டு தொடங்கப்பட்டது. குரங்கு அம்மைக்காக அமைக்கப்பட்டுள்ள பிரத்தியேக வார்டை  ஆய்வு செய்த பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன், செய்தியாளர்களை சந்தித்தார். மேலும், தமிழ்நாட்டில் குரங்கு அம்மை நோய் கண்டறியப்படவில்லை எனவும், சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் குரங்கு அம்மை சிகிச்சைக்காக பிரத்தியேக வார்டு தொடங்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.  குரங்கு அம்மைக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக இன்று பயிற்சி கருத்தரங்கம் நடைபெறுவதாகவும்,   200 மருத்துவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாகவும் கூறினார்.  சர்வதேச விமான நிலையங்களில் பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறார்கள் என்றும்,  தூத்துக்குடி மற்றும் சென்னை துறைமுகங்களில் கண்காணிப்பு பணியை தொடங்கியுள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.