விவசாயிகள் நலன் சார்ந்த கோப்பில் முதல் கையெழுத்து - பிரதமருக்கு ஜி.கே.வாசன் நன்றி

 
gk vasan

பிரதமர் நரேந்திர மோடி  விவசாயிகள் நலன் சார்ந்த கோப்பில் முதல் கையெழுத்திட்டிருப்பது பாராட்டுக்குரியது என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். 

modi

இதுதொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாரதப் பிரதமராக திரு. நரேந்திர மோடி அவர்கள் நேற்று பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு முதல் கையெழுத்தாக விவசாயிகள் நலன் சார்ந்த திட்டத்திற்கு கையெழுத்திட்டிருப்பது பாராட்டுக்குரியது. அதாவது 'பிஎம் கிசான் சம்மான்' நிதி திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 3 தவணைகளில் ரூ.6,000 நிதியுதவி அவர்களது வங்கிக் கணக்கிலேயே செலுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நாடு முழுவதும் 9.3 கோடி விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு ரூ.20,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பது விவசாயிகளுக்கு பெரும் பலனளிக்கும்.
எனவே 3 ஆவது முறை பிரதமராகப் பொறுப்பேற்ற முதல் நாளிலேயே விவசாயிகளுக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையில் கையெழுத்திட்டிருப்பது வரவேற்கத்தக்கது, நன்றிக்குரியது. மேலும் விவசாயிகள், வேளாண் துறை வளர்ச்சிக்காக பாடுபடுவேன் என்றும் நம் பிரதமர் அவர்கள் தெரிவித்திருக்கிறார்.

GK Vasan

பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு நடைபெற்ற முதல் அமைச்சரவை கூட்டத்தில் நாடு முழுவதும் 3 கோடி ஏழை குடும்பங்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்மூலம் கிராமப்புற, நகர்ப்புறப் பகுதிகளில் வீடுகள் இல்லாத குடும்பத்தினர் பயனடைவார்கள். இப்படி பிரதமர் அவர்கள் தொடர்ந்து விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் திட்டங்களை கொண்டுவந்து செயல்படுத்துவது பொது மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. எனவே பாரதப் பிரதமர் அவர்கள் விவசாயிகள், வேளாண் வளர்ச்சி, வீடு கட்டித்தரும் திட்டம்  முதல் நாளிலேயே மக்களுக்காக தொடங்கியிருக்கின்ற சிறப்பான பணிக்காக அவர்களுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.