தெரு கூட மோடி பெயரில் இருக்கக்கூடாது! குற்றாலத்தில் பெயர் பலகை அகற்றம்

 
மோடி

குற்றாலத்தில் காலனி பகுதி ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடி தெரு என்று வைக்கப்பட்ட பெயர் பலகையை பேரூராட்சி அதிகாரிகள் அகற்றினர்.

தென்காசி மாவட்டம் குற்றாலத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ளது வேலம்மாள் நகர். தனி காலனியாக உருவானப் இப்பகுதியில் ஒவ்வொரு தெருவிற்கும் முக்கிய தலைவர்கள் பெயர்கள் சூட்டப்பட்டிருந்தன. குன்றக்குடி அடிகளார் தெரு சிங்கம்பட்டி ஜமீன்தார் தெரு, அன்பில் தர்மலிங்கம் தெரு, அப்துல்கலாம் தெரு என்றெல்லாம் பெயர்கள் சூட்டப்பட்ட நிலையில், பிரதமர் நரேந்திர மோடி பெயரிலும் ஒரு தெருவுக்கு பெயர் சூட்டப்பட்டு இருந்தது. ஒவ்வொரு தெருவிலும் அது குறித்த பெயர் பலகையும் அமைக்கப்பட்டு இருந்தது.

சமீபத்தில் தென்காசி வந்திருந்த பாஜக மாநில நிர்வாகிகளில் ஒருவரான எஸ்ஜி சூர்யா என்பவர் அந்தப் பெயர் பலகை முன்பு என்று புகைப்படம் எடுத்துக் கொண்டு சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். இதைத்தொடர்ந்து அரசு அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் அவ்வாறு பெயர் வைப்பதற்கு அரசிடம் இருந்து அனுமதி எதுவும் தரப்படவில்லை என்று தெரியவந்தது .

இதையடுத்துக் குற்றாலம் பேரூராட்சி நிர்வாகத்தினர் அங்குள்ள பெயர் பலகை அகற்றினார். மேலும் சில பெயர் பலகைகளும் அவ்வாறே அகற்றப்பட்டது. தெருக்களுக்கு இவ்வாறு பெயர் சூட்டும் போது அரசிடமிருந்து உரிய அனுமதி பெற வேண்டும் என்பது விதியாகும். அவ்வாறு அல்லாமல் விதிமீறலில் ஈடுபட்டதால் இந்த பெயர் பலகைகள் அகற்றப்பட்டதாக பேரூராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.