மீனவர் நலனில் மோடிக்கு அதிக அக்கறை- ஆளுநர் ரவி
உலக மீனவர்கள் தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள ராஜ் பவனில் "உலக மீனவர்கள் தின விழா" நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி கலந்துகொண்டார்.மேலும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மீனவ மக்கள் பங்கேற்று தாங்கள் செய்த கைவினை பொருட்களை ஆளுநருக்கு பரிசளித்தனர். தமிழக மீனவர்களை ராஜ் பவனுக்கு அழைத்து நிகழ்ச்சியில் பங்குபெறவைத்த முதல் ஆளுநர் ஆர் என் ரவி தான் என்றும் டீசலுக்கானா மானியத்தை அதிகப்படுத்துதல், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ஆளுநரிடம் முன்வைத்தனர்.

மேடையில் பேசிய தமிழக ஆளுநர் ஆர் .என்.ரவி, “மீனவ சமுதாய மக்கள் தங்களது உயிரினை பணயமாக வைத்து மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள். குறிப்பாக இந்தியா முழுவதும் மூன்று கோடி மீனவ மக்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு முன்பு ஆட்சி செய்த மத்திய, மாநில அரசுகள் மீனவர் நலனில் எந்தவிதமான அக்கறையும் செலுத்தவில்லை. மீனவ மக்கள் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி தனி அமைச்சகம் உருவாக்கியுள்ளார். மீனவ சமுதாய மக்களின் வளர்ச்சிக்காக பல்வேறு நலத்திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. மீனவர்கள் நவீன தொழில்நுட்பங்களை கற்றறிந்து அதன்படி மீன்பிடி தொழில் செய்ய வேண்டும். கடல் வளத்தை பாதுகாப்பவர்கள் மீனவர் மக்கள் தான்.
மீனவ சமுதாய மக்களை அடிக்கடி சந்தித்து அவர்களை குறைகளையும், தேவைகளையும் கேட்டு அறிந்தோம். அந்த மக்களுக்கு பிரச்சனைகள் இருப்பது என்பது உண்மைதான், அவர்களின் கோரிக்கை குறித்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து உரிய நடவடிக்கை எடுக்க அழுத்தம் கொடுக்கப்படும். மீனவர்கள் மிகவும் வலிமையானவர்கள் , ஏனென்றால் அவர்கள் கடலை எதிர்த்து போராடி தொழில் செய்கிறார்கள். நம் நாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்குடி சமுதாயம் உள்ள நிலையில் அவர்கள் தங்கள் இந்தியர் என்பதற்கான அடையாள ஆவணங்கள் சான்றிதழ்கள் எதுவும் அவர்களிடம் இல்லை. மீனவ சமுதாய மக்களின் பிள்ளைகள் நன்கு படித்து, நல்ல வேலைகளுக்கு செல்ல வேண்டும். ஐஏஎஸ் அதிகாரி, போலீஸ் அதிகாரி,என பல பொறுப்புகளில் அரசு பொறுப்புகளில் வர வேண்டும். மேலும் மீனவர் நலனில் பிரதமர் மோடி அதிக அக்கறை செலுத்தி வருகிறார்” என்றார்.

