நாகர்கோவிலில் எடப்பாடி பழனிசாமியுடன் பிரதமர் மோடி ரோடு ஷோ!
தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, நாகர்கோவிலில் வேப்பமூடு சந்திப்பு முதல் வடசேரி வரை பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்தினார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் தங்களது பிரச்சாரத்தை தீவிரப் படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் பிரதமர் மோடி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ரோடு ஷோ நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் இன்று மதியம் திருவனந்தபுரம் விமான நிலையத்திலிருந்து பிரதமர் மோடி நாகர்கோவில் மறவன் குடியிருப்பு ஆயுதப்படை மைதானத்திற்கு ஹெலிகாப்டர் மூலமாக வந்த இறங்கினார். அங்கிருந்து சாலை மார்க்கமாக நாகர்கோவில் வேப்பமூடு ஜங்ஷன் பகுதிக்கு பிரதமர் மோடி வந்தார். அங்குள்ள காமராஜர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து வேப்பமூடு ஜங்ஷன் வழியாக அண்ணா ஸ்டேடியம் வடசேரி ஜங்ஷன் உள்ளிட்ட பகுதிகளுக்கு சாலை மார்க்கமாக பிரச்சார வாகனத்தில் நின்றபடி ரோடு ஷோ நடத்தினார். பிரதமர் மோடியின் இடதுபுறத்தில் கூட்டணி கட்சி தலைவர் ஆன எடப்பாடி பழனிச்சாமி, வலது புறத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பிரச்சார வாகனத்தில் இருந்தனர். வழிநெடுகிலும் இருந்த அண்ணா மற்றும் அம்பேத்கர் உள்ளிட்ட பெரும் தலைவர்களின் சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் ரோடு ஷோ நடத்தப்பட்ட ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு இருபுறமும் சாலைகளில் பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக பூக்களை தூவினர். அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பிரதமர் மோடி இரு கைகளையும் தூக்கி தொண்டர்களுக்கு கையசைத்தார். அதைப் பார்த்த தொண்டர்கள் மேலும் உற்சாகமடைந்து மோடி, மோடி,பாரத் மாதா கி ஜே என்ற முழக்கங்களை கோசமாக சத்தமிட்டனர். பின்னர் வடசேரி ஜங்ஷன் பகுதிகளில் ரோடு ஷோவை முடித்து மீண்டும் பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலமாக திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு சென்றார். இந்த ரோடு ஷோ நிகழ்ச்சிக்காக நாகர்கோவில் முழுவதுமே பலத்த பாதுகாப்பு காவல்துறையினரால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டிருந்தது. அதிமுக கூட்டணி கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடி அருகில் நின்று கொண்ட போதிலும் நாகர்கோவிலில் ரோடு ஷோ நடத்தும் பகுதிகளில் அதிமுக கொடிகளோ நிர்வாகிகளோ யாரும் இல்லாத சூழ்நிலை இருந்தது.


