டெல்லி புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி... நிகழாத ஈபிஎஸ், ஓபிஎஸ் சந்திப்பு

பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழா நிகழ்ச்சியை முடித்து மதுரை வந்த பிரதமர் மோடி, தனி விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.
நான்கு நாள் நிகழ்ச்சியாக பிரதமர் மோடி தாய்லாந்து, இந்தோனேசியா, இலங்கை பயணங்களை முடித்துக்கொண்டு இன்று காலை ராமேஸ்வரம் வந்த பிரதமர் மோடி, பாம்பன் பாலத்தை திறந்து வைத்தார். பின்னர் நண்பகல் 3.40 மணிக்கு மதுரைக்கு ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி விமானப்படை விமான தளத்தில் இருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். மதுரை விமான நிலையத்தில் தமிழக அமைச்சர்கள் மற்றும் பாஜக நிர்வாகிகள், அதிமுகவின் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணியினர் மோடியை சந்திப்பதாக இருந்தது. இதற்காக பிரதமர் அலுவலகம் 15 நிமிடம் ஒதுக்கி இருந்தது.
ஆனால் பிரதமர் மோடியை அதிமுக தரப்பில் இருந்து யாரும் சந்திக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. மதுரையில் இருந்து விமானப்படை சிறப்பு விமானம் மூலம், பிரதமர் மோடி மாலை 4 மணிக்கு டெல்லி புறப்பட்டு சென்றார்.