மோடி வருகை- திருப்பரங்குன்றம் கோவிலில் 11 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி
அரசு நிகழ்ச்சி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகை தரும் பிரதமர் மோடி இன்று மாலை 4 மணிக்கு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார்.
அரசு நிகழ்ச்சியை முடித்துவிட்டு மதுரை விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக பெருங்குடி, அவனியாபுரம் வழியாக திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வருகை தரும் பிரதமர் மோடிக்கு திருக்கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் வாசலில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டு மேளதாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து மூலவர் சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்துவிட்டு வருகை தரும் பிரதமருக்கு கம்பத்தடி மண்டபத்தில் பிரதமர் மோடிக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் பிரசாதம் வழங்கப்படுகிறது.இதனை தொடர்ந்து 4.20 மணிக்கு கோவிலில் இருந்து சாலை மார்க்கமாக பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு செல்கிறார். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் முழுவதும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது..ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பிரதமர் மோடி வருகையால் பெரியரத வீதி,சன்னதி தெருவில் உள்ள தேங்காய்,பழம்,பூ வியாபார கடைகள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன.கோவில் அருகில் திறந்திருக்கும் மற்ற கடைகளையும் 12 மணிக்குள் அடைக்க போலீசார் உத்தரவு.மேலும் வழக்கம் போல காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு ஒரு மணிக்கு கோவில் நடை சாத்தப்படும்.இந்நிலையில் பிரதமர் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு கருதி காலை 11 வரை மட்டுமே கோவிலுக்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி வருகையால் கோவில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது.மேலும் சன்னதி தெரு பெரிய ரத வீதிகளும் மாநகராட்சி நிர்வாகத்தால் தண்ணீர் பீச்சி சுத்தம் செய்யப்பட்டது.பாதுகாப்புக்காக பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு குழு மற்றும் தமிழக போலீசார் என ஆயிரத்துக்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.பிரதமர் வருகையை முன்னிட்டு போலீசார் கெடுபிடி காரணமாகஇன்று கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.

