காலிபாட்டில்களை சேகரிக்க டாஸ்மாக்கில் AI வசதியுடன் கூடிய நவீன மெஷின்!

 
ச்

டாஸ்மாக்கில் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் மாற்று முயற்சியாக தானியங்கி இயந்திரம் பயன்பாட்டுக்கு வந்தது.


டாஸ்மாக் கடைகளில் காலிபாட்டில்களை திரும்பப் பெற வேண்டும் என்கிற நீதிமன்ற உத்தரவின்படியும், பாட்டிலுக்கு 10 ரூபாய் பெறும் சிக்கலுக்கு தீர்வு காணும் நடவடிக்கையாகவும் மதுபானக் கடைகளில் பாட்டிலை திரும்ப பெற தானியங்கி இயந்திரம் பொறுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதனொரு பகுதியாக எழும்பூரில் உள்ள டாஸ்மாக் கடையில் சோதனை முறையில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. பாட்டிலில் உள்ள லேபிளை ஸ்கேன் செய்துவிட்டு உள்ளே போட்டால் அதற்கான தொகையை தானியங்கி இயந்திரம் மூலம் கிடைக்கும்.  AI வசதியுடன் கூடிய இந்த நவீன மெஷின் எழும்பூரில் உள்ள கடை எண் 480 இல் சோதனை முயற்சியாக வைக்கப்பட்டுள்ளது. சோதனை வெற்றி அடையும் பட்சத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காலி  மதுபான பாட்டில்களை வீசப்படுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை தடுக்க, காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை தமிழகம் முழுவதும் அமல்படுத்த, சுற்றுச்சூழல் மற்றும் வனப் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வு உத்தரவிட்டிருந்தது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 28 மாவட்டங்களில் இந்த திட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும்,  அனைத்து மாவட்டங்களிலும் அமல்படுத்த அவகாசம் கேட்கப்பட்டது. தினமும் 2 கோடி மது பாட்டில்களில்  விற்கப்படுவதை சுட்டிக்காட்டி, காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை முழுமையாக அமல்படுத்த மே 31ஆம் தேதி வரை உயர்நீதிமன்றம் இறுதி அவகாசம் வழங்கியது குறிப்பிடதக்கது.