திருச்செந்தூர் கோயிலில் நாளை முதல் செல்போனுக்கு தடை
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் 01.07.2026 முதல் கைபேசி தடை விதிமுறைகள் தீவிரமாக அமல்படுத்தப்பட உள்ளன.
இதுதொடர்பாக கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரை இருக்கையில் தாக்கல் செய்யப்பட்ட W.P.(MD) No.25439/2022 பொதுநல நீதிப்பேராணை மனுவில் வழங்கப்பட்ட உத்தரவின்படி, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் 14.11.2022 முதல் கைபேசி பயன்பாட்டுத் தடை நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், மாண்பமை உயர்நீதிமன்ற உத்தரவை முழுமையாக செயல்படுத்தும் பொருட்டு, 01.07.2026 முதல் கைபேசி தடை விதிமுறைகள் மேலும் தீவிரமாக அமல்படுத்தப்பட உள்ளன. பொதுதரிசனம், ரூ.100 விரைவு தரிசனம், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வரிசை உள்ளிட்ட அனைத்து நுழைவு வழிகளிலும் பக்தர்கள் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுவார்கள். எனவே, பக்தர்கள் தங்களது கைபேசிகளை தாங்கள் தங்கியிருக்கும் இடங்களிலோ அல்லது வாகனங்களிலோ பாதுகாப்பாக வைத்துவிட்டு தரிசனத்திற்கு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், பக்தர்களின் வசதிக்காக திருக்கோயில் நிர்வாகம் சார்பில் பல இடங்களில் கைபேசி வைப்பிடங்கள் (Mobile Deposit Counters) ஏற்படுத்தப்பட்டுள்ளன.
பரிசோதனையின்போது பக்தர்களிடம் கைபேசிகள் இருப்பது கண்டறியப்பட்டால், அவை பாதுகாப்பு நடைமுறைகளின்படி பெறப்பட்டு/பறிமுதல் செய்யப்பட்டு பாதுகாப்பு வைப்பகங்களில் வைக்கப்படும். எனவே, மாண்பமை உயர்நீதிமன்ற உத்தரவின்படி 01.07.2026 முதல் திருக்கோயிலுக்குள் கைபேசி கொண்டு வராமலிருக்கும் நடைமுறையை முழுமையாக அமல்படுத்துவதற்கு பக்தர்களும் பொதுமக்களும் தங்களது முழு ஒத்துழைப்பை வழங்குமாறு திருக்கோயில் நிர்வாகம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

