இன்று முதல் தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய கோயில்களில் அமலுக்கு வரும் செல்போன் தடை..

 
1

செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அனைத்து திருக்கோயில்களிலும் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல முழுமையாக தடை விதிக்கப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை அதிரடியாக அறிவித்தது. 

பழனி தண்டாயுதபாணி திருக்கோயில்

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நாளை முதல் பக்தர்கள் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதியில்லை. பக்தர்கள் கிரிவல வீதியில் உள்ள லாக்கரில் தங்கள் செல்போனை வைத்து விட்டு, டோக்கன் வாங்கி செல்லலாம் எனவும், தரிசனம் முடித்த பிறகு செல்போனை வாங்கிக் கொள்ளலாம் கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி ஸ்ரீரங்கம் கோவில்

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் செல்போன்களை பாதுகாப்பதற்காக 3 கோபுர வாசல்களிலும் சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்பட்டு, 3 ஆயிரம் பெட்டகங்களில் அதிகபட்சமாக 15 ஆயிரம் செல்போன்கள் வரை பாதுகாக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து கோயில் நிர்வாகத்தினர் கூறுகையில், “செப்டம்பர் 1 முதல் ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் செல்போன்கள் அனுமதிக்கப்படாது. இதற்காக, ஸ்ரீரங்கம் தெற்கு கோபுர வாசல், வடக்கு வாசல், கிழக்கு வாசல் என 3 இடங்களில் சிறப்பு கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது. தெற்கு கோபுர வாசல் பகுதியில் காலணிகள் பாதுகாக்குமிடம் அருகில் உள்ள கவுண்ட்டரில், வங்கி லாக்கர் போன்று 2 ஆயிரம் பெட்டகங்கள் உள்ளன. இதில், ஒரே குழுவாக வந்தால் ஒரு பெட்டகத்துக்கு 5 செல்போன்கள் வரை வைத்து கொள்ளலாம்.

வடக்கு, கிழக்கு வாசல்களில் தலா 500 பெட்டகங்கள் கொண்ட செல்போன் வைப்பு அறைகள் தயார் நிலையில் உள்ளன. மொத்தம் 3,000 பெட்டகங்களில் ஒரே நேரத்தில் அதிகபட்சம் 15 ஆயிரம் செல்போன்கள் வரை வைக்க முடியும். இதற்காக ஒரு செல்போனுக்கு ரூ.5 கட்டணம் வசூலிக்கப்படும்" என்றனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் வளாகத்தில் 2018 பிப்ரவரி 2-ம் தேதி ஏற்பட்ட தீ விபத்திற்கு பிறகு, அங்கிருந்த கடைகள் சேதமடைந்ததுடன், வரலாற்றுச் சிறப்புமிக்க வீர வசந்தராயர் மண்டபமும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால், பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் அதிகாரிகளைத் தவிர, பக்தர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் செல்போன்களை கோயிலுக்குள் கொண்டு செல்லக் கூடாது என மதுரை அமர்வு உத்தரவிடப்பட்டது. அப்போது, கோயில் போன்ற முக்கியமான மத மற்றும் பாரம்பரியத் தலங்களில் செல்போன்கள் தவறாக பயன்படுத்தப்படுவதற்கான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருப்பதாகவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

தொடர்ந்து 2018 மார்ச் 3 ஆம் தேதி முதலே மீனாட்சி அம்மன் கோயிலில் செல்போன் கொண்டு செல்ல விதிக்கப்பட்ட தடை நீடித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, திருப்பரங்குன்றம், அழகர் கோயில் உள்ளிட்ட முக்கிய கோயில்களிலும் இந்த நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது.

அண்ணாமலையார் கோயில்

திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாமலையார் கோயிலுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவது வழக்கம். இந்நிலையில், இந்து சமய அறநிலையத் துறையின் உத்தரவை தொடர்ந்து, நாளை முதல் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல முழுமையாக தடை விதிக்கப்படுவதாகவும், கோயிலின் 4 பிரதான கோபுரங்களின் அருகே தற்காலிக செல்போன் வைப்பு பெட்டகங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், செல்போனுக்கு ரூ.5 கட்டணமாக செலுத்தி டோக்கன் பெற்றுக் கொள்ளலாம் எனவும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கோயிலுக்குள் செல்போன் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த உத்தரவை மீறி யாரேனும் மறைமுகமாக கோயிலுக்குள் செல்போனை எடுத்து சென்றால், அது உடனடியாக பறிமுதல் செய்யப்படும் எனவும், சம்மந்தப்பட்ட நபர் மீது காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கோயில் நிர்வாகம் சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, தஞ்சை பெரிய கோயில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயில் உள்ளிட்ட தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கோயில்களில் இந்த நடைமுறை அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தஞ்சை கோயில்களிலும் செல்போனுக்கு தடை

தஞ்சையில் உள்ள உலகப் புகழ் பெற்ற பெரிய கோயில் என அழைக்கப்படும் பெருவுடையார் கோயில், இந்து சமய அறநிலையத்துறை, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்துடன் இணைந்த தஞ்சையை அடுத்த பிரசித்தி பெற்ற புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோயில் ஆகியவற்றிலும் பக்தர்கள் செல்போன் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் தங்களது கைபேசிகளை பாதுகாப்பாக வைக்க வசதியாக திருக்கோயிலின் கிழக்கு மற்றும் வடக்கு வாயில் அருகில் கைபேசி பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டு, அதற்கு ரூ. 5 கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. தரிசனம் செய்து விட்டு திரும்பியதும் ரசீதினைக் காண்பித்து செல்போனை பெற்றுக் கொள்ளலாம்.

இந்த உத்தரவை மீறி திருக்கோயிலுக்குள் மறைமுகமாக கைபேசியை எடுத்துச் சென்றால், சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், கோயில் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு பக்தர்கள் முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

விஐபி-களுக்கும் இந்த தடை பொருந்தும்

இந்த தடை சாதாரண பக்தர்களுக்கு மட்டுமின்றி, பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் போன்ற விஐபிகளுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் வெளியிட்ட சுற்றறிக்கையில், ‘பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கோயிலுக்கு வருகை தரும் போது, கோயில் வளாகத்திற்குள் புகைப்படம் எடுக்கவும், காணொளி பதிவு செய்யவும் எவ்வித அனுமதியும் வழங்கக் கூடாது.

திரைத்துறை உள்ளிட்ட கலைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் மற்றும் முக்கிய நபர்கள் கோயிலுக்கு வருகை தருவது தெரிய வந்தால், குறைந்தது ஒரு நாளுக்கு முன்பாகவோ அல்லது தகவல் கிடைத்த உடனேயோ, அவர்கள் வரவிருக்கும் கோயில், வருகை நேரம், அவர்களுடன் வருபவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட முழுமையான விவரங்களை ஆணையர் அலுவலகத்திற்கு கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.