பிளாஸ்டிக் கவர்களை முற்றிலுமாகத் தடைசெய்ய மநீம வலியுறுத்தல்!!

 
kamal-23

 சுற்றுச்சூழல், வனம் மற்றும் விலங்குகளின் முக்கியத்துவம் குறித்து மக்களிடம் இன்னும் அதிகம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அண்மையில் நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் அருகே, ஓர் யானை சாலையில் கிடந்த பிளாஸ்டிக் பையை உண்ணும் வீடியோ இணைய தளத்தில் வைரலாகி வருகிறது. சுற்றுலாவால் இயற்கையும், வன உயிரினங்களின் வாழ்வும் பாழாகி வருவது மிகுந்த கவலைக்குரியது.தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளில் உணவுப் பொருட்களை எடுத்துச் செல்லும் சுற்றுலாப் பயணிகள், சாலைகளிலும், வனப் பகுதிகளில் அவற்றை வீசி எறிகின்றனர். இயற்கை விளை பொருட்களை உண்ணும் விலங்குகளுக்கு,  தாங்கள் கொண்டுசெல்லும் திண்பண்டனங்களைக் கொடுத்து, அவற்றின் உணவுப் பழக்கத்தையே மாற்றி விடுகின்றனர். கோவை வனச் சரகப் பகுதியில் கிடந்த யானையின் சாணத்தில், முகக்கவசம், காலியான பால் பாக்கெட், சாம்பார் பொடி பாக்கெட், பிஸ்கட் கவர், சானிடரி நாப்கின், பெண்கள் தலைமுடியைக் கட்டும் பேண்ட் உள்ளிட்டவை இருந்தது வன உயிரின ஆர்வலர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

kamal

தினமும் சுமார் 150 முதல் 200 கிலோ உணவு தேவைப்படும் பேருயிர் யானை. அதில் 80 சதவீதம் தாவர வகைகளையும், 20 சதவீதம் மரவகைகளையும் உணவாக உட்கொள்ளும் பழக்கம் உடையவை. ஆனால், சுற்றுலாப் பயணிகளால் வனத்துக்கு வெளியே கிடைக்கும் உணவை சாப்பிடத் தொடங்கும் யானைகளுக்கு, வனத்துக்குள் கிடைக்கும் உணவைச் சாப்பிட  விருப்பம் இல்லாமல் போய்விடுகிறது.அரிசி உணவுக்குப் பழகும் யானைகள், அரிசியைக் குறிவைத்து உணவுப் பயணத்தைத் தொடங்குகின்றன. சில யானைகள் அபார மோப்ப சக்தியின் உதவியால், வனப் பகுதியை ஒட்டியுள்ள வீடுகளிலும், ரேஷன் கடைகளிலும் புகுந்து அரிசியைக் கண்டுபிடித்து சாப்பிடுகின்றன. யானைகள் வேண்டுமென்றே பிளாஸ்டிக்கை உண்பதில்லை. உணவுடன் சேர்ந்து யானையின் வயிற்றுக்குள் அவை சென்றுவிடுகின்றன.  அதிக அளவிலான பிளாஸ்டிக்கை உட்கொள்ளும்போது, அவை வெளியேற வழியில்லாமல், யானைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன.அதேபோல, கடமான், மான், காட்டெருமை, ஆடு, மாடு போன்றவை பிளாஸ்டிக்கை சாப்பிடும்போது வயிறு வீக்கம் ஏற்பட்டு, உயிரிழந்துவிடுகின்றன. இதற்கெல்லாம் முக்கியக் காரணம் சுற்றுலாப் பயணிகள் வீசியெறியும் பிளாஸ்டிக் பைகள்தான். அதுமட்டுமின்றி, வனப் பகுதியில் வீசியெறியப்படும் பாட்டில்கள் உடைந்து, யானைகளில் கால்களைக் குத்தி ரணமாக்குகின்றன. 

ttn

உலகம் கண்ட இசங்களிலேயே மோசமானது டூரிஸம்தான். சுற்றுலாவால் அழிந்த சூழலியல் இடங்கள் ஏராளம். சுற்றுச்சூழல், வனம், இயற்கை குறித்தெல்லாம் விழிப்புணர்வு இல்லாத பயணிகளால் இயற்கைச் சூழல் மட்டுமின்றி, வன உயிரினங்களும் அழிவைச் சந்திக்கின்றன.எனவே, சுற்றுச்சூழல், வனம் மற்றும் விலங்குகளின் முக்கியத்துவம் குறித்து மக்களிடம் இன்னும் அதிகம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம். அதேபோல, பிளாஸ்டிக் பைகளை முற்றிலுமாக தடை செய்ய கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, வனம் சார்ந்த சுற்றுலாத் தலங்களில் அறிவிக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் தடையை  100 சதவீதம் செயல்படுத்த தமிழக அரசும், அந்தந்த மாவட்ட நிர்வாகங்களும் தீவிரமுயற்சி எடுக்க  வேண்டுமென மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது. இந்த பூமி மனிதர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல, தாவரங்களுக்கும், விலங்களுக்கும் கூட உரித்தானதுதான் என்று மக்களும் உணர வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.