நான் தோற்றுப்போன அரசியல்வாதியா..? 20 ஆண்டுகளுக்கு முன் நான் அரசியலுக்கு வந்திருந்தால்..?- கமல் ஆவேச பேச்சு

20 ஆண்டுகளுக்கு முன்பு நான் அரசியலுக்கு வந்திருக்க வேண்டும், அந்த வகையில் நான் தோற்ற அரசியல்வாதி என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் 8-ஆம் ஆண்டு விழாவில் உரையாற்றிய கமல்ஹாசன், “நான் 20 வருடத்திற்கு முன் அரசியலுக்கு வராததுதான் தோல்வி என நினைக்கிறேன். அப்படி வந்திருந்தால் நான் நின்று பேசியிருக்க வேண்டிய இடம் மாறியிருக்கும். ரசிகர்கள் வேறு, வாக்காளர்கள் வேறு என்பது, என் அனுபவத்தில் தெரிந்து கொண்டது. நான் தோல்வி அடைந்த அரசியல்வாதி என பலரும் விமர்சிக்கின்றனர். 20 ஆண்டுகளுக்கு முன்பே அரசியலுக்கு வரத் தவறியதைத்தான் என்னுடைய தோல்வியாக நான் பார்க்கிறேன். அப்படி வந்திருந்தால், நான் பேசும் பேச்சும், இருக்கும் இடமும் வேறாக இருந்திருக்கும். நான் முதலமைச்சராக வரவில்லை. முதலில் இருந்து மாற்றி அமைக்க வந்திருக்கிறேன். கடைசி ஒரு வாக்காளர் இருக்கும் வரை நம் பணி தொடரும். இந்த வருடம் நமது குரல் பாராளுமன்றத்தில் ஒலிக்கப் போகிறது. அடுத்த வருடம் உங்கள் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்கப் போகிறது.
எனக்கு எந்த அளவு காந்தியை பிடிக்குமோ அதே அளவு பெரியாரையும் பிடிக்கும். தனக்கு எந்த மொழி தேவை என தமிழனுக்கு தெரியாதா? இதை முடிவு செய்யும் அறிவு தமிழனுக்கு உண்டு. இந்த விஷயத்தில் விளையாடாதீர்கள்” என எச்சரித்தார்.