புதுச்சேரியில் தங்கியிருக்கும் எம்.எல்.ஏக்கள் 11 மணிக்குள் சென்னை வர உத்தரவு
புதுச்சேரி அடுத்த புதுக்குப்பம் சொகுசு விடுதியில் 3 நாட்கள் தங்கியிருந்த தமிழக அதிமுக எம்எல்ஏக்கள் சென்னை புறப்பட்டு சென்றனர்.
தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுகவை தோற்கடித்து தவெக தனித்து 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. போதிய மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் காங்கிரஸ் கட்சி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தது. தொடர்ந்து மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்க தவெக நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில் அதிமுகவைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் கடந்த 6-ம் தேதி இரவு புதுச்சேரி பூரணாங்குப்பம் அடுத்த புதுக்குப்பத்தில் உள்ள சொகுசு விடுதிக்கு வரவழைக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டனர்.
நேற்று முன்தினம் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு வந்து, சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்ட எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தினார். ஒரு மணிநேர சந்திப்புக்கு பின் எடப்பாடி பழனிச்சாமி அங்கிருந்து புறப்பட்டு சென்றார். தொடர்ந்து 3-வது நாளாக நேற்று அதிமுக எம்எல்ஏக்கள் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். புதுச்சேரி அருகே சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் இன்று சென்னைக்கு காலை 11 மணிக்குள் வர அதிமுக தலைமையகம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி அனைவரும் புதுச்சேரியிலிருந்து நேற்று இரவு முதல் புறப்படத்தொடங்கினர்.

