“விஜய் குறித்து நான் பேசியதை அருள்கூர்ந்து மறந்துவிடுங்கள்”- எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்
தமிழ்நாட்டின் அரசியல் தலைவராக மட்டுமல்ல, உலக அரங்கிலும் தனித்த அடையாளத்துடன் விளங்குபவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் புகழாரம் சூட்டினார்.
சட்டமன்றத்தில் பேசிய எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன், “எங்கள் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களை சந்திக்கிற போது, ‘முதல்வர் எது பேசியிருந்தாலும், நீங்கள் இவ்வளவு தடிமனான வார்த்தைகளில் பேசியிருக்கக் கூடாது' என்று அறிவுறுத்தினார். பாளையங்கோட்டை சிறையில் என்னை சந்தித்த உதயநிதி ஸ்டாலினும் ‘நீங்கள் முதல்வரை இந்தளவிற்கு பேசியிருக்கக் கூடாது' என்றுதான் சொன்னார். கனிமொழியும் ‘முதலைச்சர் பேச்சிற்கு நாம் அறிவுப் பூர்வமாகதான் பதில் சொல்லியிருக்க வேண்டும். தடிமனான வார்த்தைகளை பேசியிருக்க வேண்டாம்' என்றுதான் சொன்னார். என்னை அறியாமல் வெளிப்பட்ட அந்த வார்த்தைகளுக்கு, அருள் கூர்ந்து மறந்துவிட வேண்டும். கொலை வாளினை எடடா மிகு கொடியோர் செயல் அறவே’ என்று அவையில் பேசியுள்ளேன். ‘கொலை வாள்’ என்ற வார்த்தையைச் சொன்னதற்காக என்னை மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்துவிட வேண்டாம். அது புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் எழுதிய வரிகள். எனவே, கொஞ்சம் பார்த்துக்கொள்ளுங்கள். சிறைக் கதவுக்குப் பின்னால் இருந்துதான் இன்று இந்த அவையில் பேசுகிறேன்.
தமிழ்நாட்டில் எந்தத் திட்டத்தை எடுத்துப் பார்த்தாலும், தமிழ்நாட்டின் முன்னோடி திட்டங்களுக்கு இணையானவற்றை உருவாக்குவது எளிதல்ல. தமிழ்நாட்டின் அரசியல் தலைவராக மட்டுமல்ல, உலக அரங்கிலும் தனித்த அடையாளத்துடன் விளங்குபவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். அவரது தலைமையில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மூலம் எல்லா இடத்திலும் இருப்பார். நானும் தேடிப் பார்க்கிறேன். இந்த பட்ஜெட்டில் புதிய நலத்திட்டங்கள் எதுவும் இல்லை. இது ஒரு கானல் நீர் பட்ஜெட். தி.மு.க. அரசின் அனைத்து திட்டங்களையும் நீங்கள் ஏற்றுக்கொண்டுள்ளீர்கள். எங்களுடைய திட்டங்களையே தொடர்ந்து செயல்படுத்தி வருகிறீர்கள். ‘மாற்றத்திற்கான அரசு’ என்று கூறிவிட்டு, திட்டங்களின் பெயர்களை மட்டும் மாற்றியிருப்பதுதான் த.வெ.க. அரசின் சாதனை. நீங்கள் சொன்ன மாற்றம் என்னவென்று பார்த்தால், இங்கே இருந்த மாடித்தோட்டம் அங்கே பூந்தோட்டம் ஆகியிருக்கிறது.
இங்கே இருந்த அவகாடோ பழம், அங்கே பட்டர் ஃப்ரூட் ஆகியிருக்கிறது. இப்படிப் பெயர் மாற்றம் மட்டும்தான் நடந்திருக்கிறது. வேறு எந்த மாற்றமும் இல்லை” என்றார்.

